செங்கோட்டையன் தனது கருத்தை பேசுகிறார் அவர் அ.தி.மு.கவில் இல்லை - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேட்டி.
தேர்தல் களத்தில் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதியாக மக்களை சந்திப்பது, மக்களின் குறைகளை கேட்டறிவது, அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அரசு மீதான விமர்சனம் என ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் போட்டி போட்டு மக்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவில் உட்கட்சி மோதலால் பல பிளவுகளால் பிரிந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனி அணியாக உள்ளது. அதிமுகவின் வாக்குகள் பிரிவதால் தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை பெற்று வருகிறது.
செங்கோட்டையன் நீக்கம்
எனவே பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் பேசியிருந்தார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்த நிலையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதிமுகவில் பரபரப்பு நீடித்துவரும் நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் எங்கள் கட்சியில்லை என தெரிவித்து கைவிரித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பதில்
மதுரையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. திருமண நிகழ்ச்சிகள் பங்கேற்றவிட்டு மீண்டும் விமான நிலையம் செல்லும் முன் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..,”
செங்கோட்டையன் தான் மட்டும் தான் ஆள வேண்டுமா?மற்றவர்கள் ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாதா? என செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக கேள்விக்கு:
ஒருவர் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது. உங்களுக்கு உரிமை உண்டு மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.
தான் மட்டும் தான் இருப்பேன் என்று நினைத்தால் ஆண்டவனை தண்டிப்பார் என செங்கோட்டையன் கூறியது குறித்து கேள்விக்கு:
அது அவருடைய கருத்து. அவருடைய கருத்துக்கு ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு கருத்து உள்ளது. உங்களுக்கும் எனக்கு ஒரு கருத்து உள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளது. இது ஜனநாயக நாடு ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவர்அனைத்திந்திய அண்ணா திமுகவில் இல்லை. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை” என செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.