தொடங்கியதில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வரை சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி, இடைத் தேர்தல் என அத்தனை தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவதேயே வாடிக்கையாகவும் கொள்கையாகவும் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி, தேர்தல் அரசியலுக்காகவும் ஆட்சி ஆதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிட்ட நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி சந்தித்த முதல் சட்ட மன்ற தேர்தலான 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதே தேர்தலில் அதிமுகவும் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை என்ற ஒரே சின்னத்தில் போட்டியிட்டது. தன்னுடைய கூட்டணியில் இருந்த சிறிய கட்சி வேட்பாளர்களை அதிமுக சின்னமான இரட்டை இலையில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. ஆனால், சீமானோ எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற துணிச்சலான முடிவை எடுத்து செயல்படுத்தினார். அது அவருக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
சி.பா. ஆதித்தனார் தொடங்கிய கட்சியை வரித்துக்கொண்ட சீமான்
தமிழர்களுக்கான உரிமைகளை கேட்டு பெற, 1958ல் நாம் தமிழர் என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தினார் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். பின்னர், அவர் திமுகவில் இணைந்து தேர்தலை சந்தித்த பிறகு, நாம் தமிழர் இயக்கம் செயல்படாமல் போயிற்று. அந்த இயக்கத்தை கட்சியாக கட்டமைத்து அதே பெயரில் தேர்தல் அரசியலுக்கு மீண்டும் எடுத்து வந்தவர் சீமான். 2010 மே 18ஆம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை கட்சியாக தொடங்கினார் அவர்.
சீமானுக்கு திருப்பு முனை தந்த ராமேஸ்வரம்
நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன் பெரியாரிய சிந்தனையாளராக, கடவுள் மறுப்பாளராக, திராவிட இயக்க பற்றாளராக இருந்த சீமான், 2008ல் ஈழத் தமிழர் மீது இலங்கையில் நடத்தப்படும் கொலை வெறி தாக்குதல் குறித்து ராமேஸ்வரத்தில் முழங்கினார். விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆதரவு தந்ததாக கூறி அதனை கண்டித்து அவர் அங்கு பேசிய பேச்சு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழ் தேசியம் பிறந்துவிட்டது என்று ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அந்த பேச்சுதான் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மீண்டும் பிறப்பதற்கான அடித்தளமாக அமைந்தது.
ஈழப்போர் முடிந்து 2 மாதங்களில் இயக்கத்தை தொடங்கிய சீமான்
ஈழப்போர் மவுனிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து, அதாவது 2009 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார் சீமான். இயக்கமாகவே தொடரும் என்ற அறிவிக்கப்பட்ட நாம் தமிழரை அதற்கு அடுத்த ஆண்டான 2010ல் கட்சியாக மாற்றினார்.
2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்டது. ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார் சீமான். அவர் பிரச்சாரம் செய்த பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றுப் போனார்கள்.
பிரபாகரனுக்கு நான் தம்பி ; உங்களுக்கு நான் அண்ணன்
பின்னர், 2010ல் கட்சி தொடக்க விழாவில் பேசிய சீமான், என்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகரனுக்கு நான் தம்பி, இங்கே கூடியுள்ள தம்பிகளுக்கு நான் அண்ணன் என்றார். அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு நகர்ந்து செல்பவர்களுக்கு மத்தியில் அந்த சாக்கடையில் இறங்கி அதனை சுத்தம் செய்யதான் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக இங்கே பரிணாமித்திருக்கிறது என்று முழங்கினார்.
2011 தேர்தலை சந்திக்காமலேயே பிரச்சாரம் செய்த சீமான்
கட்சி தொடங்கிய பிறகு அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது 2011ல் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்தது. அதில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார் சீமான். அடுத்த வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடாமல் சட்ட மன்ற தேர்தல் போலவே அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தது நாம் தமிழர் கட்சி. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதிமுக கூட்டணிக்கு வாக்குகள் கேட்டார் சீமான்.
2016ல் தேர்தல் களம் கண்ட நாம் தமிழர் – கடலூரில் போட்டியிட்ட சீமான்
கட்சித் தொடங்கி 6 ஆண்டுகள் கழித்து, 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார் சீமான். அதுவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்றார். 2009 நாடாளுமன்ற தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல், 2014 நாடாளுமன்ற தேர்தல் என கடந்த தேர்தல்களில் எல்லாம் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சீமான். இந்த முறை அதிமுகவுடன் கூட கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று கடலூர் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அவர் அதே கடலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
போட்டியிட்ட எந்த தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கூட கணிசமான வாக்குகளை அந்த கட்சியின் வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளில் பெற்றிருந்தனர். கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12, 497 வாக்குகள் பெற்று 5வது இடத்தை பிடித்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 4,58,104 வாக்குகளை பெற்றிருந்தது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. அந்த கட்சியின் வேட்பாளர் கலைகோட்டுதயம் 3 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றார்.
தனித்து போட்டி என்ற கொள்கையில் இருந்து விலகாத சீமான்
அதன்பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 தமிழக சட்ட மன்ற தேர்தல், இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் என தான் கட்சி தொடங்கி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவது என்ற தன்னுடைய கொள்கையில் இருந்து சீமான் விலகியதில்லை.
ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நிலைபாட்டில் சமரசம் செய்யப்போகிறாரா சீமான் ?
ஆனால், திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து தனித்து போட்டியிட்டால், தேர்தல் அரசியலில் தற்போதைக்கு வெற்றி பெற முடியாது என்பதை சீமான் உணர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால், தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து விலகி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து அவர் இப்போதே ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் போல் தொண்டர்களிடம் கேட்டு முடிவு ?
மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் கூட்டணி என்று தேர்தலை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா ? அல்லது வேண்டாமா என்பது குறித்து பொதுக்கூட்டம் நடத்தி தன் தொண்டர்களிடம் கேட்டு முடிவு செய்து அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அதே பாணியில், சீமானும் தான் கட்சித் தொடங்கிய மதுரையில் தேர்தல் அறிவிக்கப்படும் சமயத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, தன் தம்பிகளிடம் கருத்தை கேட்டு கூட்டணியை முடிவு செய்யலாம் என்று திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சீமானை அணுகிய அதிமுக ?
சீமான் அப்படி ஒரு நிலைப்பாட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் தமிழர் கட்சியை எப்படியாவது 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதிமுக தலைமை நினைப்பதாகவும், அது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியிடம் இப்போதே பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
2021 தேர்தலில் பல இடங்களில் அதிமுக சொற்ப வாக்குகளில் தோற்றதற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை பிரித்ததே காரணம் என்று கருதும் அதிமுக தலைமை, அந்த தோல்வியை ஈடுகட்டும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி வெற்று காட்ட வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகிறது. அதனுடைய முக்கிய பகுதியாக சீமானை தன்னுடைய நிலைபாட்டில் இருந்து சமரசம் செய்ய வைத்து, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான பணிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுவதை கணித்துள்ள அதிமுக சீமானை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
என்ன முடிவை எடுக்கப் போகிறார் சீமான் ?
2009, 2011, 2014 ஆகிய தேர்தல்களில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சீமான், 2024 தேர்தலில் தன்னுடைய தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போகிறாரா? அல்லது தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தேர்தலை தனித்தே எதிர்கொள்ள போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் சில மாதங்களில் மாறத் தொடங்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளார்கள்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தியிடம் கேட்டபோது :-
திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளோடு எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் தமிழர் கட்சி ஒருபோதும் மாறாது. தமிழ்நாட்டில் அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம் என்ற கொள்கையோடு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்தே போட்டியிடும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டி என்று ஏற்கனவே அறிவித்து, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பதாக அவதூறு பரப்பப்படுகிறது. இது 100 சதவிகிதம் கலப்படம் இல்லாத பொய்.
மக்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் திட்டமிட்டு இதுபோன்று அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காணும் என்ற நிலைபாட்டிலும் அதன் கொள்கையிலும் எந்த சமரசத்தையும் நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம் என்றார்