மம்தா பானர்ஜி.. சும்மா பெயரைக் கேட்டாலே அதிருதுல்ல என்ற வகையறா தலைவராக மோடிக்கும், அமித் ஷாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்காமல் இப்போதே அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார் மம்தா பானர்ஜி. அண்மையில் டெல்லியில் முகாமிட்ட அவர், பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
தற்போது அவர் மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால், அவரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசவில்லை. ஆனால், சிவசேனாவின் அடுத்தநிலை தலைவர்களான சஞ்சய் ராவத், ஆதித்யா தாக்கரே ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் தான் அந்த நச் பேட்டியை அவர் அளித்தார். ஐமு கூட்டணி அதாங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு (UPA) சரத் பவார் தலைமை ஏற்பாரா என்ற கேள்வி மம்தாவிடம் ஏற்பட்டது. அவருக்கே உரித்தான பாணியில் என்னது ஐமு கூட்டணியா அப்படி ஒன்று இல்லவே இல்லையே. நாங்கள் எல்லோரும் ஒன்றுகூடி முடிவு செய்வோம் என்று சொல்லிச் சென்றார். சரத்பவார் பேசும்போது, வலுவான மாற்றுத் தலைமை தேவை. மம்தாவைப் போன்றோர் தேசிய அரசியலில் கூட்டணியில் இருக்க வேண்டும் என்றார்.
மம்மதா பாஜகவுக்கு எதிராக பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக சளைக்காமல் அவர் சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறார். பாஜக, காங்கிரஸ் என மாற்றுக் கட்சியினரை தனது திரிணமூல் காங்கிரஸில் இணைத்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமையாக செயல்படுமா? இல்லை மம்தா பேசுவதுபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று அடுத்த தேர்தலில் இருக்குமா என்ற கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை. இந்தச் சூழலில் தான் பிரசாந்த் கிஷோர் ஒரு அதி முக்கிய ட்வீட்டை பகிர்ந்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேதலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்தவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர். தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அவ்வப்போது மிக முக்கிய அரசியல் கருத்துகளைப் பகிர்வது வழக்கம். அதன்படி இன்று அவர் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "காங்கிரஸ் என்ன மாதிரியான யோசனையை வைத்துள்ளது, அதன் நிலைப்பாடு என்னவென்பது வலுவான எதிர்க்கட்சி அமைய மிகவும் முக்கியமானது. ஆனால் வலுவான எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் தலைமை தான் தேவை என்பது இறைவனின் வாக்கு போன்றதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் 90% தேர்தல்களில் தோல்வி கண்டுள்ள ஒரு தனிப்பட்ட கட்சி இதனை முடிவு செய்ய முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படட்டும்" என்று கூறியுள்ளார். இதனால், மம்தா எதிர்க்கட்சியின் தலைமைக்கு முன்னிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.