தமிழ்நாட்டில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் 19, 20, 21 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை தலைமையாக கொண்டு தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி தற்போது தமிழகத்தில் தனது கால் தடத்தை பதிக்க உள்ளது. நாளை 19ம் தேதி புதுக்கோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, 20ம் தேதி சேலத்திலும், 21ஆம் தேதி வேலூரிலும் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சேலத்தில் நாளை மறுநாள் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை எருமாபாளையம் பகுதியில் உள்ள தனியார் திடலில் நடைபெற உள்ளது. சேலம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வேணுகோபால் தலைமையில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ மற்றும் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு எழுச்சி உரை ஆற்ற உள்ளனர்.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் கூறியதாவது, லட்சிய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட முதல் பொதுக்கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைப்பு மற்றும் கொடிகள், வரவேற்பு பேனர்கள், குடிநீர் வசதி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 5000 மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள், குடிநீர், கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி, தொழில் வளர்ச்சி, விவசாயம், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.
