தமிழக பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன். இவர் பா.ஜ.க.விற்கு ஆதரவாக பல்வேறு விவாத மேடைகளில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில், பெண் ஒருவருடன் வீடியோ காலில் மிகவும் ஆபாசமாக கே.டி.ராகவன் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கே.டி.ராகவன் தனது மாநில பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக பா.ஜ.க. தனி குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவினர் கே.டி.ராகவன் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து கட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
தமிழக பா.ஜ.க.வில் முக்கிய நிர்வாகியாக வலம் வருபவர் கே.டி.ராகவன். இந்த நிலையில், இவர் பெண் ஒருவரிடம் செல்போனில் வீடியோ கால் மூலமாக ஆபாசமாக பேசுவதுடன், அந்த பெண்ணிடம் மிகவும் ஆபாசமாக வீடியோ காலிலே நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. இந்த வீடியோவை பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூ டியூப் தொலைக்காட்சியில் வெளியிட்டார். உடனடியாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், கே.டி.ராகவனுக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்ததுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கே.டி.ராகவன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னையும், தன் கட்சியையும் களங்கப்படுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து பேசியதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இதை சட்டப்படி சந்திப்பபதாகவும், தர்மம் வெல்லும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவித்திருந்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்னை இரு முறை நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனால், வீடியோ ஆதாரங்களை என்னிடம் காட்ட கூறியதற்கு அவர் மறுத்துவிட்டார். பின்னர், மூன்றாவது முறையாக என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினேன். பின்னர், அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.விற்காக முன்னணி தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பங்கேற்று, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக தீவிரமாக பேசி வருபவர் கே.டி.ராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.