கொளத்தூர் தொகுதியில் சீட்டு பெற்றுத்தர கே.பி.முனுசாமி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பணத்தை வாங்க தனது மகனை அனுப்புவதாக கே.பி. முனுசாமி பேசியதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டுகளை வைத்துள்ளனர்.


ஆடியோ வெளியீடு:


ஆடியோவை வெளியிட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, கே.பி.முனுசாமி சொந்த ஆதாயத்துக்காக உழைக்கிறார்.  அவருக்கு நிறைய பணம் கொடுத்துள்ளேன். பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ சீட்டு பெற்று தந்துள்ளார். அதில் சிலர் எம்.எல்.ஏ-வாகவும் ஆகியுள்ளனர். இரு அணிகளும் ஒன்றாக இருக்கும் போதே பேரம் பேசினார்.


கே.பி.முனுசாமி குறித்து, அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதால் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளேன். எனது ஆடியோவுக்கு பதில் கூறாவிட்டால் அவர் குறித்தான வீடியோவையும், தங்கமணி , எஸ்.பி.வேலுமணி குறித்தான வீடியோவையும் வெளியிடுவேன். 


ஆடியோ வெளியானது குறித்து, இபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி எந்த தகவலும் தற்போது தெரிவிக்கவில்லை. 


தேர்தல் - ஆடியோ:


ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா மருத்துவமனையில் ஜூஸ் குடிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




கடந்த ஜனவரி 4 ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார்.  இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடுகிறது. அக்கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


இதேபோல் அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர்
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.  


இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி.முனுசாமி குறித்து வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Also Read: Erode East Election: “தேர்தல் நியாயமாக நடக்கும்; யூகமாக வரக்கூடாது” - எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் குட்டு