கரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி அதிமுக பேரூர் கழக துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், இருவரது மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். மகேஷ் இருவரையும் 12.09.24 வரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீசாரும், ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த வழக்கை வாங்கல் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் சுமார் 30 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்த சிபிசிஐடி போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது, நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு 30 - ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக முகாந்திரம் உள்ளதால் தேவைப்பட்டால் இவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கரூரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருவருக்கும் பரிசோதனை மேற்கொண்டனர்.
பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ஆர் எம். மகேஷ் உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் தேதி முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.