கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரம் வரை உறுப்பினர்கள் யாரும் வராததால், கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுசங்கர் அறிவித்தார்.




கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் 8 பேரும், அதிமுக கூட்டணியில் தமாகாவைச் சேர்ந்த சிவானந்தம் என்ற ஒரு உறுப்பினர் என 9 பேரும், திமுகவில் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதனால் அதிமுக மாவட்டப் பொருளாளரான கண்ணதாசன் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், அதிமுகவைச் சேர்ந்த முத்துகுமார் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.




கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை முத்துகுமார் ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரியிடம் தோல்வியடைந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததால், மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குக் கடந்த அக்.9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.




இதில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆகக் குறைந்தது. இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். தற்போது இரண்டு கட்சிகளும் சரிக்கு சமமாக உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் சரியான நேரத்திற்கு மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.




ஆனால், குறிப்பிட்ட நேரம் வரை உறுப்பினர்கள் யாரும் வராததால், மாவட்ட ஊராட்சி கூட்டம் மன்ற அறையில் இருக்கைகள் காலியாக காணப்பட்டது. தேர்தல் அலுவலர் மட்டும் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். குறிப்பிட்ட நேரம் வரை உறுப்பினர்கள் யாரும் வராததால் 3வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்  அலுவலர் அறிவித்தார்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண