தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவரப் பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
ஆரவாரமான வரவேற்பு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். சோமசுந்தரம் நேற்று முதல் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட் பிள்ளையார்பாளையம் பகுதியில் இன்று காலை தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். பிள்ளையார்பாளையம் பகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேண்ட் வாத்தியங்கள் முழங்க, வீரக்கலையான சிலம்பாட்டம், அதிரடியான புலி ஆட்டம் மற்றும் பாரம்பரியமான கோவில் குடைகள் சூழ வேட்பாளர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த கலை நிகழ்ச்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
நூதன முறையில் தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இப்பிரச்சாரத்தில் ஒரு புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இலவச பிரிட்ஜ், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் ஆகியவற்றை நேரடி மாதிரிகளாகக் காட்சிப்படுத்தியபடி பிரச்சார வாகனம் முன்னே சென்றது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்பதை மக்களுக்குச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேரடி வாக்கு சேகரிப்பு
வேட்பாளர் சோமசுந்தரம் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிரமாக வாக்கு சேகரித்தார். இந்த நூதனப் பிரச்சாரம் காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் இந்த அதிரடித் தொடக்கம் அக்கட்சித் தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
