நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்த சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். கமல்ஹாசன் கோவையில் உள்ள கோவை தெற்கு தொகுதியில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், சென்னை, மயிலாப்பூரில் வாக்களித்த பின்பு கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் கோவை சென்றார். பின்பு, தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டார்.
பின்பு, நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறும்போது, “ கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வருகிறது. டோக்கன் வழங்கி, பரிசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குவதாக தகவல் கிடைத்ததால் நான் புறப்பட்டு வந்தேன்.
டோக்கன் வழங்கியதற்கான நகல் என்னிடம் உள்ளது. பணமும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன். புகார்கள் அளிக்கும் பட்சத்தில் மறுவாக்குப்பதிவுக்கு வலியுறுத்துவோம்.” இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, அந்த தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் கமல்ஹாசன் நேரில் சென்று டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் அளித்தார்.