மத்திய அரசு பணம் தரவில்லை என்றால் , இவ்வளவு பணம் எப்படி வந்தது ? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
மத்திய அரசு எதுவுமே கொடுக்கவில்லை , பணமே எங்களிடம் இல்லை என்று சொல்லும் ஸ்டாலின் அவர்களே, இப்பொழுது மட்டும் பணம் எங்கே இருந்து வந்தது ?

தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எப்பொழுது பேசினாலும் மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு வர வேண்டிய பணம் வரவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டு பட்ஜெட்டில் ஜீரோவை தருகிறது என்றெல்லாம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
தமிழக முழுவதும் பல போராட்டங்கள் வெடித்து வருகின்றன. வாக்கு தவறிய திமுகவினால் மூளை முடுக்கலாம் போராட்டம் நடைபெற்று வருகிறது. வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் பெருந்திரளான மகளிர் திரட்டி பெரும் மாநாட்டை நடத்திய திமுக அதே நாளில் சம வேலை சம ஊதியம் கேட்டு தலைநகரில் போராடிய இடைநிலை ஆசிரியர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்திருக்கிறது.
ஆசிரியர்கள் மட்டுமல்ல , தூய்மை பணியாளர்கள் , செவிலியர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , ரேஷன் கடை ஊழியர்கள் , டாஸ்மாக் ஊழியர்கள் , மின்வாரிய தொழிலாளர்கள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் என்று பல்வேறு துறை சார்ந்த அரசு பணியாளர்களின் போராட்டம் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடுமையாக திணறிக் கொண்டிருக்கிறது திமுக அரசாங்கம்.
" சுமை மேல் சுமை "
தொடர்ந்து அவர்கள் சொல்லும் காரணம் மத்திய அரசிடம் இருந்து பணம் வரவில்லை. அதுமட்டுமல்ல அது அரசிடம் பணம் இல்லை என்று சொல்லி சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு , பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு , பால் பொருட்கள் விலை உயர்வு கட்டணம் , கட்டுவதற்கான அனுமதி கட்டணம் உயர்வு , மணல் ஜல்லி சிமெண்ட் போன்ற கட்டுமான பொருளின் விலை உயர்வு , குப்பை வரி உயர்வு , ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு , கழிவுநீர் வரி உயர்வு , குடிநீர் வரி உயர்வு , கல்வி கட்டணம் உயர்வு , பாடக புத்தகங்களின் விலை உயர்வு , நூல் விலை உயர்வு , டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்வு , வாகன வரி உயர்வு , இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு என்று பொதுமக்கள் மீது சுமை மேல் சுமை சுமத்திக் கொண்டு நிதி நெருக்கடியில் இருந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை
மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் , பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் , என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த அரசு ஏன் நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்கு. வருவாய் பற்றாக்குறை இருக்கிறது என்று காரணம் கூறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி மத்திய அரசு அந்த திட்டத்திற்காக ஒதுக்கிய 3,000 ரூபாய் கோடி தரவில்லை என்று குற்றம் சாட்டி ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாது என்று நிதி நிலையை காரணம் காட்டிக் கொண்டு இருக்கிறது திமுக அரசு.
அதிக கடன் வாங்கிய மாநிலம்
திமுக அரசின் நிர்வாகக் கோளாறால் , தமிழ்நாடு 2024 - 25 வரை மொத்தம் ஒன்பது லட்சத்து 55 ஆயிரத்து 690 கோடி கடனில் மூழ்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் ஆகும். அதிக வட்டி செலுத்தும் மாநிலமாகவும் , தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
தமிழக அரசின் வருவாய் 45,121 கோடியாக அதிகரித்திருப்பதும் கவலை அளிக்கிறது. 2023 - 24 மட்டும் 1.31 லட்சம் கோடி கடன் வாங்கியதாக அரசு கூறுகிறது இதில் ஒவ்வொருவர் தலையிலும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் ஆகிறது.
மகளிர் கேட்காமலே பணம் எப்படி வந்தது
ஆக இப்படி மத்திய அரசு எதுவும் கொடுக்கவில்லை மாநில கஜானாவிலும் எதுவும் இல்லை. அதனால் விலைகளை ஏற்றுகிறோம் என்று தினம் சொல்லிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அவர்களே ஒரே நாளிரவு ஒரு கோடியே 30 லட்சம் மகளிர்க்கு அவர்கள் கேட்காமலேயே ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து ஏறக் குறைய 6500 கோடி ரூபாய் ஒரே நேரத்தில் நிதி பகிர்வை எவ்வாறு பெற முடிந்தது இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது பணம் ?
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று சொல்லி விட்டு சுமார் 28 மாதங்கள் அதை கொடுக்காமல் தவிர்த்து விட்டு தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் கொடுக்க ஆரம்பித்தார்கள் ஆக அதுவும் மகளிர்க்காக அல்ல மக்களுக்காக அல்ல தேர்தலுக்காக என்பதை நிரூபித்தீர்கள். ஒட்டு மொத்தமாக மூன்று மாதங்களுக்கு சேர்த்து கொடுக்கிறோம். கோடை காலத்திற்கு 2000 சேர்த்து கொடுக்கிறோம் என்று சொல்லும் நீங்கள் ஏன் 28 மாத பணத்தை மகளிர்க்கு கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் கடன் சுமை ஒவ்வொருவர் தலையிலும் சுமத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மறுபடியும் கேட்கிறேன் , மத்திய அரசு எதுவுமே கொடுக்கவில்லை பணமே எங்களிடம் இல்லை என்று சொல்லும் ஸ்டாலின் அவர்களே, இப்பொழுது மட்டும் பணம் எங்கே இருந்து வந்தது ? என கேள்வி எழுப்பி உள்ளார்.























