உத்திரமேரூர் MLA க. சுந்தர்: 7 முறை போட்டி, 5 முறை வெற்றி! சட்டசபையில் அசத்திய சாதனை!
"7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்று, உத்திரமேரூர் தொகுதியின் அடையாளமாகவே க. சுந்தர் மாறியுள்ளார்"

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், அனைத்து நாட்களிலும் தவறாமல் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியைச் சேர்ந்த க.சுந்தர் இடம் பிடித்துள்ளார். மக்கள் பிரதிநிதியாகத் தன் கடமையைச் சரிவரச் செய்வதிலும், அவை நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்பதிலும் அவர் காட்டியுள்ள இந்த அர்ப்பணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
அரசியல் பின்புலம் மற்றும் ஆளுமை
திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான க. சுந்தர், தற்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். உத்திரமேரூர் தொகுதியில் இதுவரை ஏழு முறை போட்டியிட்டுள்ள இவர், ஐந்து முறை வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ளார். உத்திரமேரூர் மட்டுமல்லாது காஞ்சிபுரம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய தொகுதிகளிலும் நன்கு அறியப்பட்ட முகமாகவும், அடிமட்டத் தொண்டர்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டவராகவும் இவர் திகழ்கிறார்.
தொடக்க காலத் தேர்தல்களும் முதல் வெற்றியும்
க. சுந்தரின் தேர்தல் அரசியல் பயணம் 1989-ம் ஆண்டு தொடங்கியது. முதன்முறையாக உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுந்தரராமனை 11,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் காஞ்சி பன்னீர்செல்வத்திடம் சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மீண்டெழுந்த வெற்றியும் தொடர் வாய்ப்புகளும்
1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புப் பெற்ற சுந்தர், சுமார் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். மீண்டும் 2001-ம் ஆண்டு களம் கண்ட அவர், சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், 2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 2011-ம் ஆண்டு தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை.
சமீபத்திய தேர்தல் முடிவுகள்
மீண்டும் 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட க. சுந்தர், சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதியாக நடைபெற்ற 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். கடும் போட்டி நிலவிய இத்தேர்தலில், 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக உத்திரமேரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். உத்திரமேரூர் தொகுதியில் ஏழு முறை போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர் என்ற தனிச்சிறப்பை இவர் பெற்றுள்ளார்.























