பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மத்திய அரசின், புதிய சட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த மாநாடு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது. சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை முதல் நடைபெற உள்ளது. வரும் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் வரை இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது. அம்பேத்கர் கண்ட கனவை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முழுமையாக நிறைவேற்றி வருகிறது. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ரத்து தொடங்கி அம்பேத்கரின் பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தவறான பயன்பாட்டை சரியாக்கும் வகையில் வக்ஃபு திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் பாரதிய ஜனதா கட்சி அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி சேலம் பெருங்கோட்டம் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் மத்திய அரசின் புதிய சட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பொருட்காட்சி நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சியில் பத்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் திட்டங்கள் குறித்த விவரங்கள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட "என் மண் என் யாத்திரை" குறித்த தகவல்களும் நான்காண்டு கால திமுக ஆட்சியில் நாட்டு மக்கள் அனுபவித்து வரும துயரங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை உரையாற்ற உள்ளார். தேசிய தலைவர்களும் பங்கேற்கின்றனர் என்றார்.
திமுக நிர்வாகிகளையும் திமுக பேச்சாளர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்க, வேந்தர் பதவி உதவும் என நான் நினைக்கிறேன். துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வசூலிக்க, கையூட்டு பெறுவதற்கான வாய்ப்பை திமுகவிற்கு இந்த சட்டம் உருவாக்கிவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அதிகாரம் என்ற வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் அந்த பதவியில் இருப்பவர்களின் கடந்த காலத்தை குறித்து உச்ச நீதிமன்றம் யோசிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பு எனக்கு தவறாக தெரிகிறது. ஆளுநருக்கு எதிரான இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர்களை நியமித்து கோடிக்கணக்கில் செலவு செய்து திமுக இப்படி ஒரு தீர்ப்பை பெற்று இருக்கிறது. முதலீடு செய்து அறுவடை செய்திருக்கிறார்கள் என்று கூறினார்.
அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின் மூலம் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பான முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அமலாக்க துறையை வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை அமலாக்கத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்து, டாஸ்மாக் ஊழலில் கிடைத்த பணம் எங்கெங்கு சென்றுள்ளதோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்காமல் அரசியல் செய்து வருகிறார். மத்திய அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி காற்றிலே வால் வீசிக் கொண்டிருக்கிறார். டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு நேர்ந்த நிலை திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் வரும். ஏப்ரல் 19 சேலத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு திமுக எதிர்ப்புக்கான திருப்புமுனை மாநாடாக அமையும் என்று தெரிவித்தார்.