ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்திற்குள் ஊடுருவும் நபர்களை கண்டறிந்து வெளியேற்ற, ஒரு குழு அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பரப்புரையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தலானது, இரண்டு கட்டங்களாக, அதாவது நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில அரசியலை பொறுத்தவரையில், இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள இந்தியா கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணியானது தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
நிலத்தை மீட்க குழு:
இந்த நிலையில், செரைகேலா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “ஜார்க்கண்டில் பழங்குடியின மக்கள் தொகை குறைந்து வருகிறது. பழங்குடியின பெண்களை திருமணம் செய்து ஊடுருவல்காரர்கள் நிலத்தை அபகரிக்கின்றனர்.
பழங்குடியின பெண்களை திருமணம் செய்து கொண்டால், ஊடுருவல்காரர்களுக்கு நிலம் மாற்றப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வருவோம். ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்றவும், அவர்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்கவும் ஒரு குழுவை அமைப்போம்.
ஊழல்:
ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி தனிப்பட்ட ஆதாயங்களுக்கும் ஊழலுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் ஊழல் தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
ஜேஎம்எம் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.1,000 கோடி ஊழல், ரூ.300 கோடி நில ஊழல், ரூ.1,000 கோடி சுரங்க ஊழல் நடைபெற்றிருக்கிறது. மத்திய அரசு அனுப்பிய ரூ.3.90 லட்சம் கோடியிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சர்ச்சை:
ராஞ்சியில் உள்ள டமாரில் அமித்ஷா பேசுகையில், “காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம் அரசு ஜார்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடி கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிட்டு தப்பித்து விடலாம் என்று எண்ணி தேர்வுத்தாள்களை கசிந்து ஊழலில் ஈடுபடுகிறார்கள்.
ஜார்கண்ட் இளைஞர்களே, தாமரை பொத்தானை அழுத்தவும், ஐந்து ஆண்டுகளில், காகித கசிவுக்கு காரணமான அனைவரும் கம்பிகளுக்கு பின்னால் இருப்பார்கள் என மத்திய அமைச்சர் பேசினார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான அரசாங்கம் வங்காளதேச ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் நுழையும் ஊடுருவல்காரர்கள், பழங்குடியின பெண்களை திருமண செய்து சொத்துக்களை அபகரிப்பதாகவும் மத்திய அமைச்சரின் பேச்சானது, பெரும் சர்ச்சையாகியுள்ளது.