சூடு பிடிக்க தொடங்கிய தமிழக தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி பிப்ரவரி மாதம் இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளதால் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் போட்டி போட்டு களப்பணியை தொடங்கியுள்ளது. அடுத்ததாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது. அடுத்தாக தேமுதிக மற்றும் அமமுகவிற்கு வலை வீசி வருகிறது. இதில் அமமுக அதிமுக கூட்டணியில் இணைய ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தரப்பு மேற்கொண்ட நிலையில், இதில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக- அதிமுக மோதல்
இதே போல தேமுதிகவையும் தங்கள் அணியில் இணைக்க அதிமுக காய் நகர்த்தியது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இதில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என அதிமுக வாக்குறுதி கொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் வாய் மொழியாக உறுதி அளித்ததை அதிமுக நிறேவேற்றவில்லையென கூறி கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதனையடுத்து தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருந்த போதும் அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக எந்த முடிவடையும் தேமுதிக எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் திமுக தங்கள் அணியை மேலும் பலப்படுத்தும் வகையில், தேமுதிகவிற்கு தூது விட்டு வருகிறது. திமுக அமைச்சர் ஒருவர் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கு ஏற்ப தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எந்த கூட்டணிக்கு செல்லலாம் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் திமுக கூட்டணிக்கே என பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.
திமுக பக்கம் சாயும் தேமுதிக
இந்த நிலையில் அதிமுக தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், திமுக கூட்டணி பக்கம் சாய தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேமுதிகவிற்கு 7 சட்டமன்ற தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படும் எனவும் அதில் எல்.சுதீஷ்க்கு ராஜ்யசபா சீட் உறுதியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 8 முதல் 10 தொகுதி வரை தருவதாக வாக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்த போதும் வெற்றி வாய்ப்பு எந்த பக்கம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தேமுதிக வட்டாரம் கூறிவருகிறது. இருந்த போதும் அரசியலில் கடைசி நேரத்தில் என்ன மாற்றமும் நடைபெறலாம் என்பதற்கு ஏற்ப பிரேமலதாவின் கார் அறிவாலயம் நோக்கி பயணிக்குமா.? அல்லது எம்ஜிஆர் மாளிகை நோக்கி பயணிக்குமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.