Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
”இன்று டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தலைமை நிலைய செயலாளர் வேலுமணி செங்கோட்டையனுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது”

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கோவை அன்னூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அரைநூற்றாண்டு கனவு
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் அரை நூற்றாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்காக இருந்து வருவதாக நிர்வாகிகள் சொல்லிவரும் நிலையில், இந்த திட்டத்தின் பெயரை திமுக பெற்றுச் செல்வதை தவிர்க்கும் விதமாகவும் அந்த திட்டத்திற்கு உரிமை கொண்டாடும் விதமாகவுமே நேற்றைய விழா கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த விழாவில் திட்டத்தின் முக்கியத்துவத்தை கடந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பங்கேற்காதது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
செங்கோட்டையன் பங்கேற்காதது ஏன் ?
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் – செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்ததாகவும் அதன் காரணமாக செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியோ செங்கோட்டையனை தவிர்த்து அந்த மாவட்டத்தின் மற்றொரு நிர்வாகியாகவும் முன்னாள் அமைச்சராகவும் இருக்கும் கருப்பண்ணனுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் செங்கோட்டையனை ஓரம் கட்டும் வகையிலும் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்டதே செங்கோட்டையன் அதிருப்திக்கு காரணம் என்றும் பேசப்படும் நிலையில், அந்த அதிருப்தி நேற்றைய விழாவில் பட்டவர்தனமாக வெளிப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் பெயரை சொல்லாத எடப்பாடி, வேலுமணி
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய எஸ்.பி. வேலுமணியும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கருப்பணன் பெயரை மட்டுமே சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பெயரை சொல்லவில்லை. அதே நேரத்தில் ஏற்புரை வழங்கிய எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் பெயரை தவிர்த்து கருப்பணன் பெயரை மட்டும் கூறினார். இதன்மூலம், செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து ஓரங்கட்டும் முயற்சியில் வேலுமணி, தங்கமணியோடு சேர்ந்து எடப்பாடி பழனிசாமியும் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன் ?
சசிகலாவோடு சமீபத்தில் செங்கோட்டையன் ரகசியமாக பேசியதாகவும் அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், ஜெயலலிதாவிற்கே பிரச்சார பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த அனுபவம் உள்ள மூத்த நிர்வாகியாக இருக்கும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தராமல் ஓரங்கட்டுவது என்பது எடப்பாடி பழனிசாமிக்கே எதிராக திரும்பலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
விளக்கம் கொடுத்த செங்கோட்டையன்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கம் அளித்துள்ள செங்கோட்டையன், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு காரணமாக இருந்த ஜெயலலிதா புகைப்படமும் அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் புகைப்படமும் அழைப்பிதழிலும் மேடைகளில் இல்லை என்பதால் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவர் சொல்வது ஒப்புக்கான காரணம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் வரும் நாட்களில் நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து செங்கோட்டையன் பேசத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் கலக குரல்
எடப்பாடி பழனிசாமிக்கு அவர் சார்ந்த கவுண்டர் சமுதாய நிர்வாகிகள் பக்க பலமாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், எடப்படி பழனிசாமி அரசியலில் வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்தவரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவருமான செங்கோட்டையனே எடப்பாடிக்கு எதிராக இந்த முறை முதல் கலக குரலை எழுப்பத் தொடங்குவார் என ஈரோடு மாவட்டத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் பேசி வருகின்றனர்.
அதிமுக அலுவலகம் செல்லாத செங்கோட்டையன்
அதே நேரத்தில் டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை இன்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க நிலையில், செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்ச்சியி பங்கேற்குமாறு செங்கோட்டையனுக்கு தலைமைக் கழக செயலாளராக உள்ள எஸ்.பி.வேலுமணி எந்த அழைப்பையும் விடுக்காததே செங்கோட்டையன் இங்கும் வராததற்கு காரணம் என கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் அதிமுகவில் இருந்து சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.