தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமை தோறும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு
கரூரில் அவர் மாலையில் பரப்புரையில் மேற்கொண்டபோது அவரை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். வேலுச்சாமிபுரத்தில் அவரை பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு 33 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 58 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைவர்கள் இரங்கல்
இந்த உயிரிழப்பு சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட இந்திய அளவிலும் தமிழ்நாட்ட அளவிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நேரில் சந்தித்து வருகின்றனர்.
தமிழக அரசு 10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார். இதேபோன்று வெளிநாடு சென்று இருந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். கூட்ட நெரிசலால் உயிரிழந்த பொது மக்களுக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கண்டுக்காமல் சென்ற விஜய்
விஜய் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்தார். அப்போது விமான நிலையம் வந்திருந்த விஜயிடம், இது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விக்கு எந்தவித பதிலும் சொல்லாமல், கண்டுக்காமல் விஜய் சென்று இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விஜய் தரப்பிலிருந்து அறிக்கையும் வெளியிடாதது, பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இதை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.