EPS vs SPV : எஸ்.பி.வேலுமணி அணி தவெகவிற்கு வாக்களித்தால் MLA-க்கள் பதவி பறிபோகுமா.? பேரவை விதி கூறுவது என்ன.?
tn assembly sp velumani : அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தால் எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படுமா.? சட்டப்பேரவை விதி கூறுவது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆட்சியில் தவெக- 3வது இடத்தில் அதிமுக
சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாத காரணத்தால் திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தவெகவிற்கு ஆதரவை தெரிவித்தது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளார் விஜய், இதனையடுத்து நாளை விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
இபிஎஸ்- எஸ்பி வேலுமணி மோதல்
இதனால் அதிமுக மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை மீது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தவறான கூட்டணி தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டினர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியும் போட்டி போட்டு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதில் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் அணி முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் இன்று வெளியிட்டிருந்தனர்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
அதே நேரம் தமிழக சட்டமன்றத்தில் கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நாளைய தினம் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளதால் அக்கட்சிக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்துள்ளது. மேலும் தவெகவிற்கு ஆதரவு அளித்து வாக்களிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படும் வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எம்எல்ஏ பதவி பறிக்கப்படுமா.?
இந்த சூழ்நிலையில் நாளை தவெகவிற்கு எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தால் பதவி பறிக்க வாய்ப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பாக இரண்டு பிரிவாக சபாநாயகரிடம் இரண்டு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தரப்பு கொறடாவாக சி.விஜயபாஸ்கரையும், இபிஎஸ் தரப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த குழப்பமான சூழல் உள்ளதால் சபாநாயகர் யாரையும் அதிமுக சார்பாக கொறடாவாக நியமிக்கவில்லை. இதனால் நாளைய தினம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பப்படி செயல்படலாம் என சட்டமன்ற வட்டார தகவலாக உள்ளது. எனவே நாளைய தினம் தவெகவிற்கு வாக்களித்தால் அதிமுக கொறடாவால் பதவி பறிக்க முடியாது என தகவல் கூறப்படுகிறது.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















