TVK Radhan Pandit : ஊத்துக்குளி வெற்றிவேல் ரிக்கி ரத்தன் பண்டிட் ஆக மாறியது எப்படி.? ட்விஸ்ட் கொடுக்கும் ஷாக் தகவல்கள்
TVK Ricky Radhan Pandit: : தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெற்றி வேல் ரிக்கி ரத்தன் பண்டிட் ஆக மாறியது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

அரசின் சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எட்ட போராடிய தவெகவிற்கு காங்கிரஸ் கட்சியும், அடுத்தாக திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் உதவியோடு ஆட்சி அமைத்தது. இதனையடுத்து 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான துறைகள் கூட இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு வெளியாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
யார் இந்த ரத்தன் பண்டிட் ?
அமைச்சர்களுக்கு இலக்கா ஒதுக்கவில்லை, முக்கியத் துறைகளின் செயலாளர்கள் இன்னும் மாற்றப்படவில்லை. அப்படியிருக்கையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட் மட்டும் நியமிக்கப்பட்டது பலரின் புருவத்தையும் உயர்த்தியது. இவ்வளவு செல்வாக்கு மிக்க நபரா ரத்தன் பண்டிட் என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில், யார் இந்த ரிக்கி ரத்தன் பண்டிட் என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பினர்.
அந்த வகையில் வட மாநில பெயர் கொண்டவராக அரியப்படும் ரிக்கி ரத்தன் பண்டிட், வேறு மாநிலத்தை சேர்ந்தவரா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், அவரின் உண்மையான பூர்வீகத்தை கேட்டால் தலைச்சுற்றும். அவரது இயற்பெயர் வெற்றி வேல். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தான் இவருடைய சொந்த ஊர். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு சிறிய ஜோதிடராக தனது பயணத்தை தொடங்கியுள்ளார் வெற்றிவேல், இவர் கணித்துள்ள ஜோதிடம் சிலருக்கு பளித்துள்ளதையடுத்து 1996ஆம் வருடம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமாக மாறியுள்ளார்.
போயஸ்கார்டன் வரை சென்ற செல்வாக்கு
இது போயஸ்கார்டன் வரை நீண்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஜாதகத்தை பார்க்கும் வாய்ப்பு வெற்றிவேலுக்கு கிடைத்துள்ளது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர். 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கணித்து கூறியுள்ளார். அது நடக்கவே, போயஸ் கார்டனின் ஆஸ்தான ஜோதிடராகவே மாறி உச்சத்தை தொட்டுள்ளார். இதனால் அதிமுக அமைச்சர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை இவரது தொடர்பு நீண்டுள்ளது. சில வருடங்களுக்கு பிறகு இவர் மீது ஒரு சில புகார்கள் போயஸ் கார்டன் கதவை தட்டிய நிலையில் ரிக்கி ரத்தன் பண்டிட் தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இதனால் டெல்லிக்கு இடம்பெயர்ந்த அவர், வட மாநிலங்களுக்கு ஏற்றார் போல தனது பெயரை ரிக்கி ரத்தன் பண்டிட் என மாற்றம் செய்துள்ளார்.
அதிமுக தொடர்பை பயன்படுத்திய வெற்றிவேல்
அடுத்தாக அதிமுகவுடன் இருந்த போது கிடைத்த தொடர்பை பயன்படுத்தி, பாஜக மூத்த தலைவர்கள் சிலருக்கும் ஆஸ்தான ஜோதிடராக மாறியுள்ளார். ஒரு கட்டத்தில் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தனது தொழிலை விரிவாக்கம் செய்துள்ளார். அங்கு தொழிலதிபர்களின் பழக்கம் கிடைத்தையடுத்து, வருமானம் கொட்டோ கொட்டு என கொட்டியுள்ளது. இதனையடுத்து தனது பார்வையை மீண்டும் தமிழகம் பக்கம் திருப்பியுள்ளார். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு நடிகர் விஜய் அரசியல் ஆர்வத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட ரிக்கி ரத்தன் பண்டிட் விஜய்யிடம் நெருக்கமாகியுள்ளார். இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளராக மாறியவருக்கு தவெக செய்தி தொடர்பாளராக பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளார் விஜய்.
விஜயின் வெற்றியை கணித்த ரத்தன்
இந்தநிலையில்தான் தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவார் என்று ரிக்கி ராதன் பண்டிட் கணித்து அதனை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் விஜய்யின் ஜாதகம் அசாதாரணமான “சுனாமி போன்ற” வலிமைமிக்கதாக ஜாதகத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஏற்றார் போல் முதலமைச்சராக உயர்ந்துள்ளார் விஜய், இதற்கு பரிசாக ரிக்கி ராதன் பண்டிட்க்கு தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக பதவி வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று அந்த உத்தரவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார் விஜய்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா விஜயின் ஜோதிடர்?
இதுமட்டுமின்றி, மூட நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும், ரத்தன் பண்டிட்டின் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டில் தன்னுடைய 2வது மனைவியின் சகோதரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்த பழைய செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிவரும் முதல்வர் விஜய், இதுபோன்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது என்ற குரல்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்குள்ளேயே எழத் தொடங்கியிருக்கிறது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















