ARUN IPS: திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் அருண் ஐபிஎஸ் சொத்து குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்ச்சையில் அருண் ஐபிஎஸ் நியமனம்:
சட்டமன்ற தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றின் ஆதரவின் மூலம் ஆட்சி அமைத்தது. கடந்த 10ம் தேதி விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது கடும் சர்ச்சையையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக விஜய்க்கு திரைமறைவில் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தவெகவிற்கு குடைச்சல் கொடுத்த அருண் ஐபிஎஸ்
தேர்தலின் போது விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்ள, திமுகவின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு கட்டுப்பாடுகளை அருண் விதித்ததாக கூறப்படுகிறது. இவரது கெடுபிடியின் காரணமாகவே பல நேரங்களில் விஜய் பாதியிலேயே பரப்புரையை முடிக்க வேண்டியதாக இருந்தது. இதுபோக திமுகவிற்கு மிகவும் நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். இதுதொடர்பாக பல புகார்களும் தேர்தல் ஆணையத்திடம் குவிந்தன. அதன் பிறகே சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து அருண் விடுக்கப்பட்டார். அதோடு ஆட்சி மாறியதும் அவர் காத்திருப்பு பட்டியலுக்கும் சென்றார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கபப்ட்டுள்ளார். தேர்தலின் போது தவெகவிற்கு எதிராக மிகவும் தீவிரமாக செயல்பட்ட ஒருவருக்கு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவி கொடுக்கப்பட்டது எப்படி? என்பதே தற்போது பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
ரூ.500 கோடியை சுருட்டிய அருண் ஐபிஎஸ்?
இதனிடையே, யூட்யூபர் சவுக்கு சங்கரின் புதிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பேசுகையில், “சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது நிலத்தகராறு விவகாரங்களில் அருண் தலையிட்டு இரண்டு வருடங்களில் சுமார் 500 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளார். ஒருதரப்பினரிடம் பணம் பெற்றுக்கொண்டு எதிர்தரப்பினரை குண்டாஸ் சட்டத்தை போட்டு சிறையில் அடைத்துள்ளார். 2025ல் மட்டும் அருண் ஐபிஎஸ் நிர்வாகத்தின் கீழ் சென்னையில் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமானோரும், நடப்பாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமானோரும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே குண்டாஸ் நடவடிக்கை பாயும். ஆனால், அருண் பணத்தை பெற்றுக்கொண்டு பொய் வழக்குகளை போட்டும், ஒரே ஒரு புகாரில் கைதானவர்கள் மீதும் குண்டாஸ் சட்டத்தை பயன்படுத்தியுள்ளார். திமுகவிற்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராகவும் குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது” என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமாவின் தலையீடு என்ன?
மேற்குறிப்பிடப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் காரணமாகவே ஆட்சி மாறியதும் அருண் ஐபிஎஸ் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ”கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருண் ஐபிஎஸ்-ஸிற்கு முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என விஜய்க்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதுபோக, தவெகவில் உள்ள விஜய்க்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரும், அருணிற்காக சிபாரிசு செய்துள்ளார். இந்த பதவியை பெற எத்தகைய நிலைக்கும் செல்ல தயாராகி பல்வேறு வழிகளில் முயன்றும், ஆளுங்கட்சிக்கும் அழுத்தம் கொடுத்தும் அருண் தனக்கான பதவியை பெற்றுள்ளார்” என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்க்கு வார்னிங்..
லஞ்சம் பெற்றுக்கொண்டு குண்டாஸ் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கை எதிர்கொண்டுள்ள அருணையே, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்து இருப்பது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் உடனடியாக சிபிஐ உள்ளே வந்து வழக்குகளை கையிலெடுக்கக் கூடும். அப்படி இருக்கையில் திமுகவிற்கு மிகவும் நெருக்கமான அருணை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்தால், அவர் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நியாயமான விசாரணை நடத்துவாரா? அல்லது புதிய ஆட்சிக்கு உண்மையானவராகவும், விசுவாசமானவராகவும் இருப்பாரா? இதன் மூலம் அரசு யாரை காப்பாற்ற முயல்கிறது? ஊழலில் செழித்து விளங்குவதாக கூறப்படும் ஒருவரையே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிப்பதன் மூலம், தவெகவும், திமுகவும் ஒன்று தான் என முதலமைச்சர் விஜய் வெளிச்சம் போட்டு காட்டுகிறாரா? எனவும் முதலமைச்சர் விஜயை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
