ஒரு தனி மனிதனோ, ஒரு இனக்குழுவோ, பல இனக்குழுக்கள் ஒன்றிணைந்து வாழும் ஒரு நாடோ, முழுமையாக முன்னேற வேண்டும் எனில் அரசியல், சமூக, பொருளாதாரம் என்ற மூன்று விடுதலைகளை எட்டிப்பிடிப்பது அவசியமாகிறது. இந்தியாவை பொறுத்தவரை 1947-ஆம் ஆண்டு முதல் அரசியல் ரீதியிலான விடுதலையை எட்டிப்பிடித்துவிட்டாலும், முன்னேறிய சமூகங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சமூக ரீதியான விடுதலையை பெற இன்னும் இந்திய துணைக்கண்டம் இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறது. அதில் ஓரளவு தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் பொருளாதார விடுதலை பற்றியான சிந்தனைகளும் தேடல்களும் தமிழ்ச்சமூகத்தில் தற்போது அதிகரித்துள்ளன.
ஒரு தனிமனிதனோ அல்லது அவன் சார்ந்த சமூகமோ பொருளாதார ரீதியாக முன்னேறும் எனில் இந்த பழமைவாத சமூகம் ஏற்படுத்தி உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து ஓரளவு மீண்டு வர பணம் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. தமிழ்ச்சமூகத்திற்குள் இருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கனவு எந்தளவிற்கு அண்ணாவுக்கு இருந்ததோ அதே போல் தமிழர் அல்லாத பிற இனத்தினர் தமிழ் வணிகத்தில் செலுத்தும் நிலையில் வணிகத்தில் சமவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அண்ணாவின் கனவு இன்னும் கனவாகவே இருந்து வருகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்துவரும் நிலையில் அண்ணாவின் 53-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 142 பேர் தங்கள் மொத்த வருமானத்தை 30 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளனர். இந்திய அரசின் மொத்த வருவாயே ஆண்டுக்கு 40 லட்சம் கோடிதான் இது ஒரு முதலாளித்துவ பட்ஜெட் என தனது அதிர்ந்துபேசாத குரலில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாச்சாரம், வரலாறு குறித்த புரிதல் உள்ளது அவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்கிறேன் என மக்களவையில் முழங்கி உள்ளார் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி
மேற்கண்ட இருவரின் கருத்துகளையும் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்தவர் அண்ணா. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்தாலும் வைதீக சமூகங்களும், வடநாட்டு வணிக சமூகங்களும் இந்தியா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் என்ற அண்ணாவின் கருத்து தற்போது வரை காலவதியாகாத ஒன்றாகவே இருந்து வருகிறது. மூலதனம்தான் எல்லாம். சரிசமமான மூலதன பகிர்வு இல்லாமல் எந்த சமத்துவத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என தரவுகளுடன் பேரறிஞர் அண்ணா நிறுவும் பணத்தோட்டம் புத்தகம் கவனம் பெற்ற ஒன்றாக உள்ளது.
’மற்ற எல்லாத் தோட்டங்களையும் விட, அதிக பலன் தருவது பணத்தோட்டம். ஒரு போகம் இரு போகமல்ல பலமுறை உண்டு விளைவு!! விதை தூவிவிட்டு, காலம் என்ற நீரைப்பாய்ச்சி, சட்டம் என்ற வேலியை அமைத்து அஜாக்கிரதை என்ற களையைப் பறித்துவிட்டு பார்! அந்த தோட்டத்தின் விளைவுபோல, வேறு எந்த தோட்டத்திலும் கிடையாது! ஆயிரம், ஆறு ஆயிரமாகும்; பிறகு அதுவே பத்துமாகும்’’ - என தனது பொருளாதர சிந்தனை குறித்த நூலான பணத்தோட்டத்தில் குறிப்பிடும் பேரறிஞர் அண்ணா.
வடநாட்டு முதலாளிகள், இத்தகைய வெற்றி பெறுவதற்கான சகல வழிகளையும் அமைத்துக் கொண்டனர். அவர்கள் ‘முறை’ ’திறமை’ ‘போக்கு’ மேனாட்டவரிடமிருந்து கற்றுக் கொண்டனர். அரசியல் துறையிலே செல்வாக்கு தேடிக்கொள்ளும் விஷயத்திலே வடநாட்டு வணிக வேந்தர்கள் மேநாட்டவரையும் தோற்கடித்துவிட்டனர். தமிழ்நாடு விடுதலை கிளர்ச்சியிலே ஈடுபட்டது வடநாட்டுக்கு லாபமாகிவிட்டது. சீமைச்சாமான் பகிஷ்காரம், சுதேசி இயக்கம், வடநாட்டுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்துவிட்டது. அசோகனின் கரம் தட்டிய காலத்திலும் திறக்கப்படாத திராவிட நாட்டுக்கதவு திறக்கப்பட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டதாக கூறும் அண்ணா,
இங்கு புதிய தொழில் நடத்த ஒரு கரம்சந்துக்கு இருக்கிற அளவு வசதி ஒரு கருப்பண்ணன் செட்டியாருக்கு கிடையாது. இந்தியா ஒருநாடு என்ற கொள்கைப்படி ஆட்சி நடப்பதால் கருப்பண்ணன் செட்டியார் நாட்டிலே, கரம்சந்த் தொழில் நடத்த வருவதை தடுக்க முடியாது - சொந்த நாட்டிலேயே கரம்சந்துக்கு இடமளித்துவிட்டவர்கள் வடநாட்டிலா போய் தொழில் நடத்த முடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழி ஆதிக்கம், சமூக, பொருளாதார சமநிலை குறித்த கருத்துகள் தமிழகத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில் அவை தற்போது தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.