தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்றும்
பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசிய போது அவர்களின் அறிவுத்திறன் குறைவாக இருந்ததை அறிந்து கொண்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
"நாட்டை முன்னேற்றும் பெண்கள்" தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. திருவள்ளுவர், சாதி, மகாத்மா காந்தி, வள்ளலார் என பல்வேறு விவகாரங்களில் அவர் பேசிய கருத்துகளுக்கு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, "பெண் சக்தி தான் இந்த நாட்டை முன்னேற்றுகிறது.
பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலகமே இந்தியாவில் ஆற்றலை திறனை திரும்பிப் பார்த்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கும் இந்தியாவின் ஆலோசனை கேட்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்: 2047ல் நூறாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும்போது இந்தியா முழுமையாக ல்லரசு பெற்று விளங்கும். அதற்கு பெண் சக்தியின் பங்களிப்பு மிக அவசியம். ஒவ்வொரு வீட்டிற்கும் பெண்களே முதுகெலும்பாக இருக்கிறார்கள். அதே போல் நாட்டிற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த 25 வருடம் மிகவும் முக்கியமானது. இந்த நாட்டில் மிகப்பெரிய ஆற்றல், மிகப்பெரிய ஆளுமை, மிகப்பெரிய வேட்கை இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் அவசியம். பெண்கள் இல்லாத இந்தியா கிடையாது.
மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது" என்றார்.
சமீபத்தில், மகாத்மா காந்தி குறித்து பேசிய ஆளுநர், "நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார்.
அதற்கு முன்பு, திருவள்ளுவர் குறித்து பேசிய ஆளுநர், "ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.