பெரியாரை மிக மோசமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்தவர்களை சாடி நடிகையும் பாஜகவிலிருந்து விலகியவருமான காயத்ரி ரகுராம் (Gayathri Raghuram) பதிவிட்டுள்ளார்.
‘அவர்கள் எதுவும் நாட்டுக்காக செய்யவில்லை’
தன்னுடைய இந்தப் பதிவில் பாஜக குறித்து கடுமையாக விமர்சித்துள்ள காயத்ரி ரகுராம், "பாஜக தங்களைப் பற்றியோ அவர்களின் சாதனைகளைப் பற்றியோ இந்துக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றியோ எதுவும் சொல்ல முடியாது.
ஏனென்றால் அவர்கள் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை, தோல்வியடைந்தனர். பார்லிமென்ட் தாக்குதல் விவகாரம், ஈ.டி அங்கித் திவாரி விவகாரம், உ.பி. பாஜக எம்.எல்.ஏ 15 வயது சிறுமி பலாத்காரம் விவகாரம், ஆருத்ரா மோசடி விவகாரம், பாஜக தமிழக ரவுடிகள் விவகாரம், மத்திய அரசு வெள்ள நிவாரண தமிழக நிதி விவகாரம் என எதுவும் சொல்ல முடியாத நிலையில் திசைதிருப்ப, பெரியார், நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி அவர்களை பற்றி கேலி செய்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸூக்கு நன்கொடை
முன்னதாக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்தும் காயத்ரி ரகுராம் பேசி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக பாஜகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனை அடுத்து தொடர்ந்து பாஜகவை நேரிலும் சமூக வலைதளப் பக்கத்திலும் கடுமையாக காயத்ரி ரகுராம் விமர்சித்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளித்த காயத்ரி ரகுராம் இது குறித்து தன் இணைய பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1380 நன்கொடை வழங்கிய காயத்ரி ரகுராம், “எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை.
எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை.
பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்” எனக் காட்டமாக பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி காயத்ரி ரகுராம் 1380 ரூபாய் நன்கொடை அளித்ததுடன் அதற்கான சான்றிதழையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது