விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
’’இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 : (அரசு தனது மக்களின்ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றைத் தனது முதன்மைக் கடமைகளாகக் கருதும். குறிப்பாக, மருத்துவ நோக்கங்களுக்காகவன்றி போதை தரும் பானங்கள் மற்றும் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் மருந்துகள் ஆகியவற்றின் நுகர்வுக்குத் தடையைக் கொண்டுவர அரசு முயற்சிக்கும் என்று கூறுகிறது.
ஆனால் இந்தக் கடமையை ஒன்றிய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. அதனால் நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்கள் குடி நோயாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
மதுவின் பிடியில் 30 லட்சம் சிறார்கள்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 13.12.2023 அன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட எழுத்துபூர்வமான விடையில் இந்தியாவில் 10 முதல் 17 வயது கொண்ட மக்கள் தொகையில் 30 லட்சம் பேர் மது அருந்துவதாகவும் 20 லட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் 98 லட்சம் பேர் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிலிருந்து 75 வயது வரையிலான மக்கள் தொகையில் 15.10 கோடி பேர் மது பயன்படுத்துவதாகவும் 2.90 கோடி பேர் கஞ்சா பயன்படூத்துவதாகவும் 4.10 கோடி பேர் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 ஆயிரம் ஆண்களும் 22 ஆயிரம் பெண்களும் கஞ்சா பயன்படுத்துவதாகவும் ஓப்பியம் பயன்படுத்துகிற ஆண்களின் எண்ணிக்கை 171,000, பெண்களின் எண்ணிக்கை 6000 என்றும் மயக்கம் தரும் மாத்திரைகளைப் பயன்படுத்துகிறவர்களில் ஆண்கள் 1.92 லட்சம் பேர் , பெண்கள் 10 ஆயிரம் பேர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்கேய்ன் என்ற போதைப் பொருளைப் பயன்படுத்துகிறவர்கள் ஆண்களில் 7000 பேரும் பெண்களில் 1000 பேரும் உள்ளனர் என்றும் தமிழ்நாட்டில் ஏ.டி.எஸ், புகைப்பதன் மூலம் மயக்கம் தரும் போதைப்பொருட்கள் புத்தியை நிலைகுலையச் செய்யும் போதைப் பொருட்கள்(hallucinogens) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் ஆண்கள் 1. 82 லட்சம்,பெண்கள் 13 ஆயிரம் பேர் எனவும் அப்போது ஒன்றிய அரசின் சமூக நீதித் துறை இணை அமைச்சராக இருந்த நாராயணசாமி தனது எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார் (13.12.2023).
இந்தியா முழுவதும் மது - போதைப் பொருள் நுகர்வு மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது என்பதையே இந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட தமிழ்நாடு
இந்திய ஒன்றிய அரசு மதுக்கடைகள் போதைப் பொருட்கள் ஆகியவற்றைக்கட்டுப்படுத்தாமல் அனுமதிப்பது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானதாகும். ஒன்றிய அரசின் இந்தக் கடமை தவறிய போக்கின் காரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தபோது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அரசமைப்புச்சட்டத்தின் உறுப்பு 47 ஐ சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞரும் நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
நச்சுச் சுழல்
மதுவிலக்கு குறித்து ஒன்றிய அரசு தெளிவான கொள்கை எதையும் உருவாக்காத காரணத்தாலும், நாடு முழுவதும் மது விற்பனையைத் தடுக்காததாலும் மாநில அரசுகள் தங்களது வரி வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கு வேறு வழியின்றி மது விற்பனையை நாட வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வது ஒரு நச்சுச் சுழலில் சிக்கிக்கொள்வதன்றி வேறல்ல. இதனால் இந்தியா முழுவதும் மனித வளம் சீரழிகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை பெருகுகிறது.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தபோதிலும், எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தினாலும் மக்களின்வறுமையை முற்றாகத் துடைத்தெறிய முடியவில்லை. அதற்கு முதன்மையான காரணம் மது போதைப்பொருள் நுகர்வே ஆகும். எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.
மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
- தேசிய மதுவிலக்குக் கொள்கை ஒன்றை அறிவிக்குமாறு இந்திய ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
- 1954ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நியமித்ததைப் போல இப்போது மீண்டும்மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்குமாறு ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
- மது விலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
- 16 ஆவது நிதிக்குழுவில் மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை முடிவு செய்யும்போது மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடைகளின் எண்ணிக்கையை மட்டுமின்றி விற்பனை இலக்கையும்கூட படிப்படியாகக் குறைப்பதற்கும், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையை அறிவிப்பதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்’’.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.