கேள்வி : கச்சத்தீவு தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக பார்க்க காரணம் என்ன?


பதில் : ”கச்சத்தீவு 285 ஏக்கர் அளவுள்ள சிறிய தீவு. இந்த தீவை கடந்த 1974 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு கொடுத்தார். கச்சத்தீவு எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்துள்ளது. 2009 ல் போர் முடிந்த பிறகு தமிழக மீனவர்கள் இலங்கைக்கு அருகே மீன் பிடிக்க சென்றதில் இருந்து இந்த பிரச்சனை அதிகமாகியது. பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். பிரதமர் மோடி கூட இப்பிரச்சனை குறித்து பேசியுள்ளார். தேர்தல் சமயத்தில் கச்சத்தீவை பொருளாக எடுத்துக் கொண்டு திரும்ப பெற வேண்டுமென சொல்வது வாக்கு வாங்குவதற்காகவும் இருக்கலாம் என மக்கள் கருதுவார்கள்.


கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. என்னை பொருத்தவரை கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியம் கிடையாது. நல்லிணக்க அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீவை, 50 ஆண்டுகள் கழித்து திரும்ப கேட்டால் இலங்கை அரசு ஒத்துக்கொள்ளாது. நாமும் அதை எடுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது என ஒரு உத்தரவு கொடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதால் கைது செய்யப்படுகிறார்கள். 2010 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 7 ஆயிரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி முந்தைய காலத்தில் இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களும், இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்தது போல, எல்லை பார்க்காமல் மீன் பிடிக்க அனுமதித்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு வரும்”




கேள்வி : கச்சத்தீவை அப்போதைய மாநில அரசுடன் கேட்டு தடுத்து தான் தந்ததாக பாஜக தலைவர் கூறுகிறார். ஒரு மாநில அரசு நினைத்து இருந்தால் அதனை தடுத்து இருக்க முடியுமா?


பதில் : ”கச்சத்தீவை பிரதமராக இருந்த இந்திரா காந்தி கொடுத்தார். இரண்டு நாடுகள் என வரும்போது, அது மத்திய அரசு சார்ந்த விஷயம். மாநிலம் சார்ந்த விஷயம் அல்ல. அதனால் மாநில அரசு கச்சத்தீவு விவகாரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. மாநில அரசு போராட்டம் செய்து மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைக்க மட்டும் தான் முடியும். மற்றபடி முடிவு மத்திய அரசு தான் எடுக்க முடியும். 1974 ல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசிடம் சொல்லியிருக்கத்தான் முடியும். வேறு எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு. இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு”


கேள்வி : கச்சத்தீவை திரும்ப பெற வாய்ப்புகள் உள்ளதா?


பதில் : ”கச்சத்தீவை திரும்ப பெற வாய்ப்புகள் இல்லை. வலுக்கட்டாயமாக அதனை எடுக்கவும் முடியாது. அதற்காக சாத்தியமும் கிடையாது”


கேள்வி : கச்சத்தீவை திரும்ப பெற்றால் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடுமா?


பதில் : ”ஒருவேளை கச்சத்தீவை திரும்ப பெற்றால் இந்திய மீனவர்கள் கஷ்டம் இருக்காது. அதேசமயம் யாழ்பாண மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அங்குள்ள மீனவர்கள் போருக்கு பின்னர் தற்போது தான் கடலுக்கு சென்று மீன் பிடிக்கிறார்கள். இரண்டு அரசுகள் ஒப்புக்கொண்டாலும், யாழ்ப்பாண மீனவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது கேள்விக்குறி தான்”


கேள்வி : தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?


பதில் : ”இந்திய கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், எல்லை தாண்டி இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நிரந்தர தீர்வு காண வழிவகுக்கும்”