உலகின் கவனம் ஆஃப்கானிஸ்தானை நோக்கி குவிந்துள்ளது.


தமிழகத்தைப்போல 5 மடங்கு பெரிய பரப்பளவை கொண்ட நாடு அது. சர்வதேச ஊடகங்கள் ஆகஸ்ட் 15 முதல் ஆப்கான் அரசியலை தலைப்பு செய்தியாக்கி பரபரப்பூட்டி  வருகின்றன.20 ஆண்டுகால நெடிய போராட்டத்திற்கு பின்பு மீண்டும் தாலிபான்கள் அங்கு ஆட்சியை பிடித்துள்ளனர்.


தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். 45% என்ற அளவில்  பெரும்பான்மையாக வாழும் பஷ்தூன் இனத்தை அவர்கள் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் பாகிஸ்தான் எல்லையோரம் மிகுதியாக வாழ்கின்றனர். ஆப்கானிய வரலாறு போர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அதன்  புவியியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்ரமிப்புக்கு எதிராக போராடுவதே அவர்களின்  வாழ்வாகிவிட்டது  ஒரு விநோத வரலாறாகும். கிரேக்கர்கள் தொடங்கி எந்த நாட்டு பேரரசுகளும் ஆஃப்கானை நிம்மதியாக ஆள முடியவில்லை. பிரிட்டன் 3 முறை படையெடுத்து பிறகு பின் வாங்கியது. 1989-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் (இன்றைய ரஷ்யாவை உள்ளடக்கிய கூட்டரசு ) 14 ஆயிரம் வீரர்களை இழந்து அங்கிருந்து தோல்வியோடு திரும்பியது.




இப்போது அமெரிக்கா தன் நோக்கத்தில் வெற்றிபெற முடியாத நிலையில், 4 ஆயிரம் நேட்டோ படை வீரர்களை இழந்து கசப்பான நினைவுகளுடன்  வெளியேறி இருக்கிறது. கூலிக்காக போராடுபவர்களுக்கும், மண்ணுரிமைக்காக போராடுபவர்களுக்கும்  இடையில் வீரம் என்பது விலை மதிப்பற்றதாகி விடுகிறது. 


இது ஒரு வரலாற்று உண்மையாகும்.


தலிபான்கள் தங்களை  விடுதலை போராட்ட அமைப்பினர் என்று கூறினாலும், அவர்களது அதிரடியான சில நிகழ்வுகள் எதிர்மறை தோற்றத்தை உருவாக்கி விட்டது. அவர்களின் இறுக்கமான அணுகுமுறைகளும், பழங்குடியின போக்குகளும், அரசியல் அறியாமைகளும் அவர்களை தீவிரவாதிகளாக உலக பார்வையில் நிறுத்தியிருக்கிறது. இன்றைய ஆப்கானிய நிலவரத்தை 1979- களிலிருந்து  திரும்பி பார்ப்பது புதிய தலைமுறையினருக்கு ஒரு புரிதலை தரும். 1979 டிசம்பர் 24 அன்று அன்றைய சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, ஆப்கானியர்களின் விடுதலை போராட்டங்கள் தீவிரம் பெற்றது. அங்கு போராட்டக்காரர்கள் போராளிகள் என பொருட்படும்  முஜாஹிதீன்கள் என்று மக்களால் கொண்டாடப்பட்டனர். அமெரிக்காவும், பாகிஸ்தானும், சவுதி உள்ளிட்ட நாடுகளும் அவர்களை ஆதரித்தனர். 


அகமத் ஷா மசூத், குத்புதீன் ஹிக்மத்கியார், ரப்பானி போன்ற கொரில்லா படைத் தலைவர்கள்  ஆப்கானியர்களின் கதாநாயகர்களானார்கள். 1989-ஆம் ஆண்டில்  சோவியத் யூனியன் சிதைவுறும் தருணத்தில், அவர்கள் தோல்வியுடன் காபூலை விட்டு அவர்கள் வெளியேறியதும், முஜாஹிதீன்களிடையே பனிப்போர் ஏற்பட்டது.  ஒரு இடைக்கால அரசு அங்கு அமைந்தாலும்  முழு அமைதி திரும்பவில்லை. இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட தலிபான்கள் அதிரடியாக முன்னேறி 1996-ஆம் ஆண்டில் ஆட்சியை பிடித்தனர். இதை அமெரிக்கா ரசித்தது.




ஆம்..அமெரிக்க - சோவியத்தின் ஆயுத ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பலி கொடுக்கப்பட்டது.


அடுத்தடுத்த பரபரப்புகளில் ஆப்கான் நிலை குலைந்தது. தலிபான்கள் தங்களை வலிமைப்படுத்திக்கொண்டு, ஏனைய விடுதலை போராட்ட அமைப்புகளை ஒடுக்கினார்கள். இதில் அகமத் ஷா மசூத் என்ற மக்கள் செல்வாக்கு மிக்க போராளி  தலைவரை , ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது தலிபான்கள் கொன்றனர். அது அவர்கள் செய்த மாபெரும் அரசியல் தவறாகி போனது. பின்னர் பாமியனில் உள்ள புத்தர் சிலையை அவர்கள் பீரங்கியால் தகர்த்தது உலகை அதிரச் செய்தது. 


பசியில் வாடிய எங்கள் மக்களுக்கு உதவாத ஐ.நா அமைப்புக்கள் ஒரு சிலையை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்தது என்ன நியாயம்? என தலிபான்கள் கேட்டனர். ஆனால் உலகம், அதற்கு இது தீர்வல்ல என நிராகரித்தது.  அதன் விளைவு பர்மாவிலும், இலங்கையிலும் பௌத்த வலதுசாரிகள் அந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயலாற்ற தொடங்கியது தலிபான்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்களின் உலகளாவிய அரசியல் அறிவு அவ்வளவுதான்.


பிறகு ஏர் இந்தியா விமானத்தை நேபாளிலிருந்து , காந்தஹாருக்கு கடத்திய போது அதுவும் கடும் கண்டனத்திற்குள்ளானது. விடுதலைப்போராட்ட அமைப்பாக தங்களை முன்னிறுத்திய  தலிபான்கள், ஆட்சி புரிவதில் ராஜதர்மங்களையும், பெருந்தன்மைகளையும் பெற்றிருக்கவில்லை என்ற விமர்சனம் பன்னாட்டு ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டது.



அவர்கள் நல்லவர்கள், ஊழலற்றவர்கள், எளிமையானவர்கள், நேர்மையானவர்கள் என்ற தகவல்கள் எல்லாம் அவர்கள் மீதான விமர்சனங்களில் எடுபடாமலே போய்விட்டது. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது உலகமே பீதியடைந்தது.


அதற்கு யூத அமைப்புக்களின் சதி காரணமா? 


(அல்லது)


சோவியத் யூனியன் மறைவுக்குப் பிறகு தங்களுக்கு ஒரு எதிரியை காட்டி உலகை ஆள வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா உளவு அமைப்புகள் நடத்திய நாடகமா?


என்ற கேள்விகள் வலிமை பெறும் முன்னரே, அல்-கொய்தாவும், ஒஸாமா பின் லேடனும் தான் இதற்கு காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.


உடனே இதை காரணம் காட்டி, ஒஸாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தலிபான்களிடம் அமெரிக்கா கேட்டு கொண்டது. இதனடிப்படையிலேயே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் 2001-ஆம் ஆண்டில்  ஆப்கானில் களமிறங்கின. 


நிலைமையின் தீவிரம் உணர்ந்து பதிலடி கொடுக்காமல் தலிபான்கள் காபூலில் இருந்து பின்வாங்கி பதுங்கினர். அமெரிக்கா அங்கு மூன்று லட்சம் பேர் கொண்ட ஒரு உள்நாட்டு ராணுவத்தை உருவாக்கியது. எனினும் அவர்கள் நினைத்தது போல் எதுவும்  நடக்கவில்லை. 20 ஆண்டுகால நெடும்போரில் அமெரிக்காவுக்கு பொருட்சேதம், உயிர்ச்சேதம் என பெரும் பாதிப்பு ஏற்பட்டது.


கத்தார் நாட்டின் சமாதான முயற்சியில் ஈராண்டுகளாக நடந்த  பேச்சுவார்த்தை‌களின் படி ;
2020 -பிப்ரவரியில்  'தோஹா அமைதி ஒப்பந்தம்' மூலம் அமெரிக்காவும், தாலிபான்களும் கையெழுத்திட்டனர். 2021 செப்டம்பர் 11 தேதிக்குள்,அமெரிக்கப்படைகள் அங்கிருந்து முழுவதுமாக விடைபெறுவது என்பது அதில் முக்கிய அம்சமாகும்.


கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் பட்ஜெட்டிற்கு நான்கு வருடங்களுக்கு தேவையான தொகையை; அதாவது 2 ட்ரில்லியன் டாலர்களை அங்கு அமெரிக்கா இழந்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னை நம்பிய ஆப்கானிய ராணுவம், அரசு, மக்கள்  என சகலரையும்  கைவிட்டு ; தப்பித்தால் போதும் என்ற அளவில் அமெரிக்கா   முடிவெடுத்தது. அமெரிக்கா வியட்நாமில் அடைந்த தோல்விக்கு பின், இத்தகைய அவமானத்தை ஆப்கானில் இப்போது பெற்றிருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவின்  வெளியுறவு அரசியலை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.


இது பற்றி நேற்று (ஆகஸ்ட் 16) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளது அவர்களது  இயலாமையை   வெளிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.




"ஆப்கானிஸ்தானை கட்டமைக்க நாங்கள் படைகளை அனுப்பவில்லை. தற்போது படைகளை திரும்ப பெறுவதற்காக வருந்தவும் இல்லை. ஆப்கானிய அரசும், ராணுவமும் முழு மூச்சாக தாலிபான்களை எதிர்க்கவில்லை. தங்கள் நாட்டுக்காக தாங்களே போராடாத போது , நாங்கள் ஏன் சண்டையிட வேண்டும்"? என ஜோ பைடன் பேசியுள்ளார்.


நல்ல கேள்வி! நல்ல விளக்கம்! 


இந்நிலையில் இரண்டே  வாரத்தில்  ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அதிவிரைவாக வென்றெடுத்துள்ளது உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 85 ஆயிரம் தான். அவர்களுக்கு எங்கும் எதிர்ப்பு இல்லை. வழியெங்கும்  அரசப் படைகளின்  சரணடைவுகளை ஏற்றுக் கொண்டு முன்னேறியுள்ளனர்.


அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகள் துப்பாக்கி முனையில் அமையும் தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கமாட்டோம் என அறிக்கை விட்டன. ஆனால் தலிபான்கள் நிதானமாகவே செயல்பட்டுள்ளதாக தெரிகிறது..  முன்பு அமெரிக்க படையெடுப்பின் போது, 2001 -ல் பதிலடி கொடுக்காமல் அமைதியாக வெளியேறினார்கள். அதே நுட்பமான அரசியலை இப்போதும் தாலிபான்கள் கடைபிடித்துள்ளனர். காபூல் எல்லையை நெருங்கியதும் அங்கேயே நின்று விட்டார்கள். 


இரத்தம் சிந்தாமல் ஆட்சியை பிடிப்பதே எங்கள் நோக்கம் என்றும் அறிவித்தார்கள்.  தலைநகரில் ராணுவம் சரணடையவும் வாய்ப்பு கொடுத்தார்கள். அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதும் அதிகாரிகளும், ராணுவமும் ஒதுங்கி கொண்டனர். தலிபான்கள் அமைதியாக நுழைந்து அதிபர் மாளிகையும், அரசு தொலைக்காட்சியான டோலோ நியுசையும்  தங்கள்  வசப்படுத்தி, 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளனர். மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், அனைவருக்கும் பாதுகாப்பு உண்டு எனவும் , கொள்ளைகள் நடைபெறாமல்  தடுக்கவே சோதனைகள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர்.


BBC-இன் செய்தியாளர் மாலிக் முராசிக் காபூலின் நிலையை கீழ்கண்டவாறு கூறுகிறார்...


மக்கள் தலிபான்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். பதற்றம் இல்லை. பெண்கள் உட்பட வழக்கமான மக்கள் நடமாட்டம் உள்ளது. போக்குவரத்தும் சீராக உள்ளது என்கிறார். CNN தொலைக்காட்சியும், அல் ஜெசீராவும்  காபூல் நிலவரத்தை அவ்வாறுதான் ஒளிபரப்புகின்றன. அங்குள்ள ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ், முன்பு இருந்ததை விட இப்போது தலிபான் கட்டுப்பாட்டில் நிலைமை சிறப்பாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.


அங்கு காணப்படும் விமான நிலைய காட்சிகள்  காண்போரை கவலையில் ஆழ்த்துகின்றன.  தலிபான்களை எதிர்த்தவர்கள் அல்லது அவர்களை கண்டு பயந்தவர்கள் நாட்டை விட்டு  வெளியேற துடிக்கிறார்கள். தலிபான்கள் அவர்களின்  அச்சத்தை போக்குவது முக்கிய கடமையாகும். இதனிடையே உலக நாடுகள் ஆப்கானின் புதிய அரசியல் நிலையை பரிசீலிக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. சீனா தாலிபான்களை தாலாட்ட தொடங்கியுள்ளது. ஐரோப்பிய யூனியன் தாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக கூறியுள்ளது. பாகிஸ்தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகளான ஈரான், தாஜகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகியன சற்று மிரண்டு போயுள்ளன. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC)என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை.




தலிபான்களை ஒழுங்குபடுத்துவதில் ஐ.நா.வுக்கும், அவர்களுக்கும்  பெரும் பங்கு இருக்கிறது. அவர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இந்தியா அதிர்ச்சியில் இருக்கிறது. ஏனெனில் கடந்த இருபது ஆண்டுகளில் அணைகள்,சாலை, இரும்பு பாதை, பாலங்கள் என அந்நாட்டின் உள்கட்டமைப்பில் நிறைய முதலீடு செய்திருக்கிறது.  அங்கு வருடத்திற்கு 1.4 லட்சம் பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின்  வர்த்தகம்  உள்ளது.


ஆப்கானில் நிலவும் அமைதியும், சீரான வளர்ச்சியும் பிராந்திய நலனுக்கு மிகவும் அவசியம் என இந்தியா கருதுகிறது. இது நியாயமான கவலை. இந்த நிலையில் தாலிபான்களை எதிர்க்க இனி ஆப்கானிஸ்தானில் யாரும் இல்லை என்பதே யதார்த்த நிலையாகும். எனவே அவர்களை உலக ஒழுங்கிற்குள் கொண்டு வர முயற்சிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.


அதனால் தான் வல்லரசு நாடுகள் அவர்களோடு பேச்சுவார்த்தைக்கு தயாராகி உள்ளதாக தெரிகிறது.. தாலிபான்கள் உலகின் அரசியல் ஓட்டங்களை அவதானித்து தங்களின் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும். அவர்களின்  அணுகுமுறைகளில் நெகிழ்வு தன்மை அவசியம்.  இல்லையெனில் அவர்களால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது என்பதை உணர வேண்டும். கல்வி கூடங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், நீண்ட - அகல சாலைகள், குடிநீர் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகள் அந்நாட்டின் முக்கிய தேவைகளாக உள்ளன. இவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சீக்கியர்கள், இந்துக்கள், கிரித்தவர்கள்  பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களை, உரிமைகளை பாதுகாப்பதில் வெளிப்படைத்தன்மை அவசியம்.


அதுபோல் பெண்ணியக் கோட்பாடுகளில் நடுநிலை போக்குகள் தேவை. இதுகுறித்து பன்னாட்டு அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்றோர்களிடம் அவர்கள் ஆலோசனை பெறுவது நல்லது. தாலிபான் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷாகின் BBC பேட்டியில், ”பெண்கள் தற்போதுள்ளது போல் வேலைக்கு செல்லலாம் என்றும், கல்வி கற்றல் உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்று கூறியிருப்பதும், ஐ.நா சபை இதை குறிப்பிடத்தக்க மாற்றம் என வரவேற்றிருப்பதும் கவனிக்கத்தது. தலிபான்களின் கலாச்சார பிரிவு தலைவர் இனாமுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும்,  பெண்கள் பாதுகாப்பான சூழலில் பணிபுரியலாம்” என்றும் கூறியுள்ளார்.


இதுவும்  ஒரு ஆரோக்கியமான மாற்றமே.


தாலிபான்கள் தங்கள் பழைய ஆட்சி முறையிலிருந்து மாறி, சகல மக்களின் உணர்வுகளையும்  மதித்து ஆட்சி செய்ய முன்வர வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.


தனிநபர் உரிமைகள் குறித்த கடந்த கால அணுகுமுறைகளில் தலிபான்கள் நிறைய  மறு பரிசீலனை செய்ய வேண்டும். 'இந்த மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை' (2: 256)என்ற குர்ஆன் வசனத்தையும், அறிவுறுத்துவது மட்டுமே நம்முடைய பணி(13:40), கட்டாயப்படுத்துவது அல்ல  என்ற  குர்ஆன் வசனத்தையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.




அண்டை நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்துவதுடன், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளத்தைப் பயன்படுத்தி வறுமையை உடைப்பது அவர்களின் தலையாய பணியாக இருக்க வேண்டும். இதர இனக்குழுக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களையும் தங்கள் ஆட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும்.


தற்போது முன்னாள் அதிபர்கள் ஹமீது கர்சாய், அப்துல்லா அப்துல்லா ஆகியோர் தாலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரான அமிர்கான் முத்தகி போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை  உலகம் ஆவலோடு உற்று நோக்குகிறது. மேலும் இந்தியா, ஈரான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது தலிபான்களுக்கு  சிறப்பையே பெற்று தரும்.


போர், இரத்தம், படுகாயம், பசி, கண்ணீர்  என கதறி அழும் உலகத்தை விட, அமைதியும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும், ஒழுக்கமும் கொண்ட புதிய உலகை காண ஆப்கன் மக்கள் விரும்புகிறார்கள்.  நாங்கள் மக்களுக்கானவர்கள்; சமூக நீதியை மதிப்பவர்கள்;அமைதியை விரும்புபவர்கள் என்பதை தலிபான்கள் நிருபிக்க வேண்டும். 


தலிபான்களிடம் உலகம் அதை தான் எதிர்பார்க்கிறது.


(கட்டுரையாளர் : மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)