புதிய கட்சி ரெடி.. விஜயை நோக்கி நகரும் ஓ.பி.எஸ்... சைலன்டாக இருப்பதன் பின்னணி என்ன ?
அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் பன்னீர் செல்வத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது தேர்தல் கூட்டணிகள் உருவாகத் தொடங்கிவிட்டன.
அதிமுக - பாஜக கூட்டணி - Admk - Bjp Alliance
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி 2019 ஆம் ஆண்டு மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்த போட்டியிட்டனர். இந்தநிலையில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி உடைந்தது. அதிமுக, தேமுதிகவுடன் இணைந்த தேர்தலை சந்தித்தது. பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் தோல்வி அடைந்தன.
தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில், அதிமுக பாஜகவுடன் இணையாது என கருத்து நிலவிய நிலையில், திடீரென அதிமுக பாஜக கூட்டணி உருவாக்கியது. இதனால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறி வந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனி கட்சியாக உள்ளது. டிடிவி தினகரன் முதலில் அதிமுக ஒன்றிணை வேண்டும் என குரல் கொடுத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என, தனது வழியே மாற்றிக்கொண்டார்.
குறிப்பாக கட்சியை ஒன்று சேர்ப்பது என்பது இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ளும், பிரச்சனை என்பதால் அந்த முடிவிலிருந்து டிடிவி தினகரன் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அனைவரும் ஒன்றி இணைய வேண்டும் என குரல் கொடுத்து வந்தார். இதனால் டிடிவி தினகரன் உடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரச்சனை இல்லை என தெரிகிறது . டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் பிரச்சனை இல்லை என, அமித்ஷாவிடமே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாடு
இதனைத் தொடர்ந்து, அதிமுக போன்று கொடி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களை பயன்படுத்துவதாக கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீது அதிமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார்
பிரச்சனையில் இருக்கும் ஓ.பி.எஸ்
இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்தும் தனி கட்சியாக தொடங்கினாலும், எடப்பாடிக்கு ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் இல்லை எனவே தெரிகிறது. இதனால் இபிஎஸ்ஐ சமாதானம் செய்ய எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரையும் சமாதானம் செய்து விடலாம் என பாஜக தலைமை, கருதுகிறது. அதுவரை ஓ. பன்னீர்செல்வம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம், அமைதியாக இருக்குமாறு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்தும் ஓபிஎஸ் தரப்பு, தனிக்கட்சி ஒன்றை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை பா.ஜ.க இபிஎஸ்காக தங்களை கைவிட்டால், விஜயுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா என ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாஜக தலைமை ஓபிஎஸ்ஐ அவ்வளவு எளிதாக விட்டுவிடாது என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.





















