Admk Ex Mla Govindasamy : தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
Admk Ex Mla Govindasamy : தவெகவில் கடந்த வாரம் இணைந்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி திடீரென அரசியலே வேண்டாம் என ஒதுங்கியுள்ளார். இதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் தோல்வி- பல்டி அடிக்கும் அதிமுக நிர்வாகிகள்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாளுக்கு நாள் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், 50 ஆண்டுகளாக திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதே நேரம் சட்டமன்ற தேர்தலில் 3 வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால் அக்கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள்
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கொத்து கொத்தாக அதிமுக மாஜி எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பம், சிவபதி உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதே போல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தவெகவில் இணைந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்ட போது என் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம், நான் எந்த கட்சிக்கும் போக மாட்டேன் என கோவிந்தசாமி வீடியோ வெளியிட்டிருந்தார்.
தவெகவில் இருந்து விலகிய கோவிந்தசாமி
இந்த நிலையில் தவெகவில் கோவிந்தசாமி இணைந்த நிலையில், அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து கோவிந்தசாமியை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தனக்கு அரசியலே வேண்டாம் என ஒதுங்கியுள்ளார் கோவிந்தசாமி. தவெகவில் இணைந்த ஒரு வாரத்தில் என்ன நடைபெற்றது. தவெகவில் இருந்து விலக காரணம் என்ன என பல கேள்விகள் எழுந்த நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசியலே வேண்டாம்- கோவிந்தசாமி
அதில், நான் கடந்த வாரம் சூழ்நிலை காரணமாக வேறு இயக் கத்துக்கு சென்றேன். தற்போது உள்ள சூழ்நிலையில் எனது மனமும், உடலும் ஒத்துழைக்காத காரணத்தால் இன்று முதல் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன். நான் எந்த இயக் கத்திலும் நான் இல்லை. எனவே இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொது சேவையில் மக்களோடு தொடர்ந்து இருப்பேன் என்று அந்த அறிக்கையில் கோவிந்தசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















