சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள், சேலம் மாநகராட்சியில் மின் மயானங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாநகரப் பகுதிகளில் குடிநீர் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, குடிநீரை ஏழு நாட்களுக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் செல்வராஜ், சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. நான் இரண்டு நாட்கள் வீட்டில் முடங்கி கிடத்தேன். இனி இது போன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


இதற்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் பதில் அளித்த கூறும்போது, மக்களிடமும் மாமன்ற உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க திட்டமும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.



இந்த கூட்டத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், அதிமுக கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில் மாநகராட்சி பணிகள் எதையும் நடத்தவிடாமல் திமுக நிர்வாகிகள் தடுப்பதாக குற்றம் சாட்டினார். விசைத்தறிக்கூடங்களுக்கு வரி உயர்த்துவதை கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி, கூட்டரங்கை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது மாநகராட்சி உதவி ஆணையாளர் வேடியப்பன் அதிமுக கவுன்சிலர்களை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி, அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி அதிகாரியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மேஜையின் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திமுக கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கூட்டரங்கை விட்டு வெளியே தள்ளினர். இதனால் சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்டு விட்டு செல்லுமாறு கூறியதாக உதவி ஆணையாளர் வேடியப்பன் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.