தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ, ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு , பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு :
கேள்வி : காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தலைவராக பொறுப்பேற்ற பிறகு என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளீர்கள் ? காங்கிரஸ் என்றாலே வயதானவர்கள் கட்சி என்ற பிம்பம் இருக்கிறதே அதனை உடைத்து இளைஞர்களை கட்சியில் ஈர்க்கும் விதமாக என்ன செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள் ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : ஆறு மாதமாக காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன். மிகவும் துடிப்போடும் ஆர்வத்துடன் கட்சி பணிகளை தோழர்கள் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்கள் 77 கட்சி மாவட்டங்கள், அனைத்து பகுதிகளில் திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முழு வேகத்தில் கட்சிப் பணி நடைபெற்று வருகிறது. கட்சியை பொறுத்தவரை எல்லோரும் சேர்ந்து, கட்சிப் பணிகள் போராட்டங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். வெகு சீக்கிரமாக நல்ல வளர்ச்சியை அடையும் என நம்புகிறோம். இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும், குறிப்பாக கட்சி தொண்டர்களின் சராசரி வயது 50-க்கும் குறைவாக, மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஒதுக்கீடு, சிறுபான்மையினர் மக்களுக்கு ஒதுக்கீடு, பட்டியலைனா மக்களுக்கு ஒதுக்கீடு , மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கீடு என முயற்சி எடுத்து வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முழுமை அடையும்
கேள்வி : ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுப்பியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இப்படியான கோரிக்கையை திமுகவிடம் எழுப்ப இப்போது வாய்ப்பு இருக்கிறதா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : கூட்டணி ஆட்சி என்பது முழுக்க முழுக்க, கொள்கை முடிவு. இதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த கூட்டணி என்பது எஃகு கோட்டையை போல் வலிமையுள்ள கூட்டணி. சிறு, சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் எந்தவித தோய்வும் இந்த கூட்டணியில் ஏற்படாது, நாளுக்கு நாள் தொடர்ந்து இந்த கூட்டணி வலிமை பெற்று வருகிறது. தேசத்தை பாதுகாக்க வேண்டும், பாசிச சக்திகளை விரட்ட வேண்டும் என்றால் இந்த கூட்டணியின் தேவை இன்னும் 25 ஆண்டுகளுக்கு வேண்டும்.
கேள்வி: கடைசியாக காங்கிரஸ் கட்சி 2014 இல் தனித்துப் போட்டியிட்டது. தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா ? தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிடதான் முடியுமா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : காங்கிரஸ் கட்சியை வளர்த்திருக்கிறோம், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வளப்படுத்துவது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே நேரத்தில் நாட்டில் உள்ள பிரச்சனைகள், பாசிச பிரச்சனைகள் , இந்துத்துவ பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஆகையால் வலிமையாக எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும், அந்தந்த காலகட்டத்தில் இயற்கை சூழல் என்ன சொல்லுகிறதோ , அதற்கேற்றாரு முடிவுகளை எடுப்போம். கூட்டணி தர்மம் என்பது வலிமை இருக்கிறது , கட்டுக்கோப்புடன் இருக்கிறது இந்த கூட்டணி தொடரும்.
கேள்வி : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு உங்களுக்கு அழைப்பு வந்துள்ளதா ? அதில் நீங்கள் பங்கேற்பீர்களா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : விடுதலை சிறுத்தை கட்சி மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்துள்ளது. மது ஒழிப்பு மாநாட்டில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா அவர்கள் கலந்து கொள்கிறார்.
கேள்வி: விடுதலைச் சிறுத்தை கட்சியில் பல்வேறு குழப்பங்கள் சர்ச்சையில் இருந்து வருகிறது. இதில் பாஜக தலையீடு இருக்கிறது என நினைக்கிறீர்களா ? விசிகவின் ஆதவ் அர்ஜுனை பாஜக இயக்குகிறதா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : இது விடுதலை சிறுத்தை கட்சியின் பிரச்சனை, இதில் காங்கிரஸ் கட்சி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதில் எதையும் நியாயப்படுத்துவதற்கோ கருத்து சொல்வதற்குகோ ஒன்றும் இல்லை. அவர்கள் இந்திய கூட்டணியில் வலிமையாக இருக்கிறார்கள்.