K Krishnasamy: மதசார்பின்மை என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணசாமி மீது அட்டாக்:
புதிய தமிழகம் கட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பாஜகவினர் கிருஷ்ணசாமியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், மற்றொரு தரப்பினர் கிருஷ்ணசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, “இதற்கு எதற்கு தனிக்கட்சி பாஜகவிலேயே சேர்ந்து விடலாமே, இந்து நாடாக அறிவிச்சிட்டா அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துடுமா ஐயா, காவி சாயம் வெளுத்து விட்டது, உங்களை நம்பி இருக்கும் மக்களை தவறாக வழிநடத்ததாதீர்கள், தேர்தலில் ஒரு சீட் பார்சல், ஒத்த சீட்டுக்காக எப்படிலாம் பேச வேண்டி இருக்கு” என கடுமையாக சாடி வருகின்றனர். இந்த ஆவேசமாக கருத்துகளுக்கு காரணமான அறிக்கை கீழே வழங்கப்பட்டுள்ளது.
”இந்து தேசமாக அறிவிக்கணும்”
கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதசார்பின்மை என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல எந்த மதத்தையும் சாராது நிற்பது.இந்தியாவை 'இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு. 140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே.
இந்திய அரசியல் சாசனம் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய பொக்கிஷம். 200 ஆண்டுகால ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வதே அன்று சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் பிரதான லட்சியமாக இருந்ததுள்ளது. அதனால் தான் ”வெள்ளையனே வெளியேறு” என்பது அவர்களின் முக்கிய கோசமாக இருந்தது.
”பரந்துபட்ட சிந்தனை இல்லாத தலைவர்கள்”
சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, இந்தியாவை எப்படிப்பட்ட சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதில் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு சிலரைத் தவிர, எவருக்கும் பரந்துபட்ட சிந்தனை இல்லை. பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்கத்திய முதலாளித்துவச் சிந்தனை வயப்பட்டவர்களாகத்தான் இருந்துள்ளனர். நேரு போன்றவர்கள் சோசலிச சிந்தனை உடையவர்களாக இருந்துள்ளனர். எனினும், இந்திய அரசியல் சாசனத்தில் அதற்கான பிரதிபலிப்பு வெளிப்படவில்லை. காந்தி ராம ராஜ்ஜியம் பேசியும், ராமும் ரஹீமும் ஒன்று என்றும் குழப்பமான கருத்தை கொண்டிருந்துள்ளார். காங்கிரஸ்காரர்கள் தீவிர மற்றும் மிதவாத சிந்தனையாளர்களாகவே அன்று இருந்துள்ளனர்.
”முழுமை பெறாத அரசியல் சாசனம்”
சுதந்திரம் உச்சக்கட்டமாக இருந்த பொழுது துருக்கியை மையமாக வைத்துச் செயல்பட்ட ’கிலாபத் இயக்கம்’ சுந்தரப் போராட்டத்தில் கலந்து கொண்டது. ஆனால் அதன் நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென 1946 இல் ஜின்னா பிரிட்டிஷின் பிரித்தாலும் சூழ்ச்சிக்குப் பலியாகி, தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியாவில் 246 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அந்த நிர்ணய சபை பரந்துபட்ட இந்திய மக்களின் கருத்துக்களை முன்வைத்தது. ஆனால் பாகிஸ்தான் பிரிவினைக் கருத்துக்கள் மேலோங்கிய பின்னர் அரசியல் நிர்ணய சபையால் அதன் போக்கில் பயணிக்க முடியவில்லை. எனவே அரை குறையாக இந்திய அளவில் நிர்ணய சபை செயல்பட்டது. அதனால் முழுமை பெறாத இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் கூறியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை இந்திய அரசியல் சாசனத்திலும் புகுப்பட்டுள்ளது மட்டுமே மகிழ்ச்சிகரமானது.
”இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்”
ஒரு மிகப்பெரிய பிரதேசம் மத ரீதியாகப் பிளவு பட்ட பிறகு, அதே மத ரீதியான மக்களையும் உள்ளடக்கி எப்படி மதச்சார்பற்ற தேசமாக விளங்க முடியும் என்பதைப் பற்றி சிறிதும் சிந்தித்துப் பார்த்து அரசியல் வடிவம் கொடுக்கப்படவில்லை. பிரிவினைக்குப் பின்னர் இந்தியா 'இந்து' நாடாகத்தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் ’சாதி’ பிரிவினைகள் உண்டு என்பதை அனைவரும் அறிவர். மொழி ரீதியான மாநிலப் பிரிவினைகளால் இந்தியாவின் பிரதானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலவில்லை. மேலும், மொழிவாரி மாநில பிரச்சனைகளே இந்தியாவின் இன்றைய பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது.
”அரசியல் கோஷம் மட்டுமே”
மதச்சார்பின்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கோஷமே தவிர, 140 கோடி இந்திய மக்களின் உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தக் கூடியது அல்ல. குறிப்பிட்ட ஒரு சில நபர்கள், அரசியல் கட்சிகள் சில மதங்களின் மடிகளில் சாய்ந்து கொண்டு பேசுகின்ற போலித்தத்துவமாக மதச்சார்பின்மை இருக்கக் கூடாது. எந்த மதத்தையும் உண்மையில் சாராமல் நின்று பேசுவதாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் ஒரு தேசிய இனம். எனவே சாதிகளை தேசிய இனமாக அங்கீகரித்துவிட்டு, இந்தியாவை இந்து தேசமாக அறிவிப்பதே இந்தியாவிற்கும் பாதுகாப்பு! இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு.!” என கிருஷ்ணசாமியை வலியுறுத்தியுள்ளார்.