தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினரா ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் காங்கிரஸ் கட்சியினருக்கும், தமிழக அரசியல் கட்சியினருக்கும் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


சிவாஜியின் சீடன்:


அரசியலுக்குள் வரும்போதே மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியவாறு அரசியலுக்கு வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திராவிட கட்சிகளின் வழிகாட்டியாக இருக்கும் பெரியாரின் அண்ணன் ஈவெ கிருஷ்ணசாமியின் பேரனும், திராவிட கட்சிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈவிகெ சம்பத்தின் மகனும் என்ற மிகப்பெரிய பின்னணியுடன் வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.


மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது, காங்கிரஸ் கட்சியில் சிவாஜிக்கு தோளோடு தோள் கொடுத்து நின்ற, அவரது சிஷ்யனாகவே உலா வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈவெகி சம்பத் 1977ம் ஆண்டு காலமானபோது அவரது மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் களத்திற்குள் புகுந்தார். அப்போதே, சிவாஜி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக வளர்ந்திருந்தார்.

நெருக்கமான நட்பு:


காமராஜரால் கவரப்பட்ட சிவாஜி தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டு, காங்கிரஸ் கட்சிக்காக தீவிர களப்பணியாற்றினார். 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றாலும் சிவாஜி காங்கிரசின் பக்கமே நின்றார். காமராஜர், இந்திரா காந்தி ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த சிவாஜி, காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் களத்திற்குள் புகுந்தார். அப்போது முதலே ஈவிகேஎஸ் இளங்கோவன் சிவாஜியுடன் நெருக்கமான நட்பு பாராட்டினார்.


இந்திராகாந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர்.  மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்ததாலும் 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – அ.தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் முதன்முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். களமிறங்கிய முதல் தேர்தலிலே 62.97 சதவீத வாக்குகள் பெற்று சத்யமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். மத்தியிலும் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பேற்றார்.


சிவாஜிக்காக காங்கிரசையே உதறியவர்:


பின்னர், தமிழக அரசியலில் புதிய புயல் வீசியது. முதலமைச்சராக பொறுப்பு வகித்த எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் காலமானார். இதனால், அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அணி – ஜானகி அணி என்று உருவாகியது. ஜானகி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது, கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியிடம், அக்கட்சியின் முக்கிய தலைவரான சிவாஜி பிரதமர் ராஜீவ்காந்தி ஜானகியையே ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


ஆனால், அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், கூட்டணியின் நலன் கருதியும் ராஜீவ்காந்தி நடிகர் சிவாஜியின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால், சிவாஜி  கடும் அதிருப்தி அடைந்தார். இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு சிவாஜி காங்கிரஸில் இருந்து விலகினார். அப்போது, சிவாஜியின் தீவிர ஆதரவாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரஸில் இருந்து விலகினார்.


இதையடுத்து, காங்கிரசுடன் ஏற்பட்ட மன உளைச்சலால் காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி 1988ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியில் சிவாஜிக்கு மிகப்பெரிய உறுதுணையாக நின்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.


வாழ்நாள் கடன்:


அப்போது, தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஜானகி தலைமையிலான அ,தி.மு.க. அணியுடன் கூட்டணி சேர்த்து தேர்தலைச் சந்தித்தார் சிவாஜி. அந்த தேர்தலில் திருவையாறு தொகுதியில் சிவாஜி போட்டியிட, பவானி சாகர் தொகுதியில் தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அ.தி.மு.க. தோல்வி அடைந்தாலும் கட்சி ஜெயலலிதாவின் வசமானது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.


இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு சிவாஜி தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதனால், மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். சிவாஜியின் அரசியல் சரிவு காலத்திலும் அவருக்கு பக்கபலமாக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வாழ்நாள் முழுவதும் சிவாஜிக்கு கடமைப்பட்டிருப்பதாக அடிக்கடி கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது,