புதுச்சேரியில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தர்ஷன் நிதியின் கீழ் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களின் திறப்பு விழா, அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரி பாரதி பூங்காவில் புனரமைக்கப்பட்ட மண்டபம், திருக்காஞ்சியில் அமைந்துள்ள கங்கைவராகநதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சங்கராபரணி நதியில் படித்துறை மேம்பாடு, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நீலக்கொடி தர சான்று பெற்ற ஈடன் கடற்கரை திறப்புவிழா மற்றும் புதுச்சேரி வணிக திருவிழா 2022-23ஆம் ஆண்டிற்கான சின்னம் வெளியிடப்பட்டது.


இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி ஆட்சி குறித்து விமர்சனம் செய்தது குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "இங்கே நல்ல ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து விமான நிலைய விரிவாக்கத்திற்கு 300 ஏக்கர் நிலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது புதுவைக்கு தேவையானது தமிழகத்தில் இருந்து அந்த 300 ஏக்கர் நிலம். திராவிட மாடல் புதுச்சேரிக்கு தேவை கிடையாது. ஆகவே விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அந்த நிலத்தை முதலில் கொடுக்கட்டும்.


புதுவை மக்கள் மீது உண்மையான அக்கரை உள்ளது என்றால், இது புதுவை மக்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களும் தான் இதில் பயனடைவார்கள் என்பதை நான் தமிழக முதல்வரை சந்திக்கும் போதும், தென்னக முதல்வர் மாநாட்டிலும் இதை நேரடியாக அவரிடம் கேட்டிருக்கிறேன். புதுச்சேரிக்கு என்ன வேண்டும் என்பதை அதை முதலில் தரட்டும்," என்றார் தமிழிசை. "இன்னொன்று இங்கே எந்த அடக்குமுறையும் இல்லை. நான் ஒரு துணைநிலை ஆளுநர் மட்டுமே, அடக்குமுறை என்பதெல்லாம் கிடையாது நான் துணையாக மட்டுமே நின்றுக் கொண்டிருக்கின்றேன்


ஆளுநரின் தலையீடா என்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆள் ஆளுக்கு தலையீடு இருக்கின்ற தமிழக அரசை விட ஆளுநர் தலையீடு இருந்தால் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஏனென்றால் அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் நாங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஒன்று இருக்கிறது. அதனால் இன்றைய சூழ்நிலையில் அண்ணன் ஸ்டாலின் புதுச்சேரிக்கு வந்து பேசியது எதுவுமே சரி கிடையாது என்பதை தெளிவாக சொல்கிறேன். இணையாக ஒற்றுமையாக ஒரு ஆட்சி நடைபெறுகிறது," என்று தெரிவித்தார் தமிழிசை சௌந்தரராஜன்.


தொடர்ந்து பேசிய அவர், "பொம்மை ஆட்சி நடைபெறுகிறது. பொம்மையாக முதலமைச்சர் இருக்கிறார் என்று தமிழக முதல்வர் சொன்னது உண்மைதான், ஆனால் கர்நாடகாவில் தான், புதுச்சேரியில் இல்லை. அண்ணன் ஸ்டாலின் தவறாக சொல்லிவிட்டார். பொம்மை அவர்களின் ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் என்று தெரியாமல் சொல்லிவிட்டார். அவர்கள் எல்லாம் சொல்லும் அளவிற்கு இங்கே ஒன்றும் இல்லை. நல்ல ஆட்சி நடைபெற்ற கொண்டிருக்கிறது," என்று கூறினார்.



"இன்னொன்று திரும்ப திரும்பச் சொல்கிறேன்,  புதுவையில் புதுமை ஆட்சி என்பதால் நாங்கள் சொல்கிறோம் திராவிட மாடல் என்பதற்கு தமிழ் பெயர் என்ன? நேற்று கூட கலைஞரின் மகன் என்று சொன்னார். கலைஞரின் மகன் தான் அவர். அதற்கு திராவிட மாடல் என்பதற்கு நல்ல தமிழ் பெயர் கண்டுபிடியுங்கள்," என்கிறார் துணை நிலை ஆளுநர். உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு வேளை அதுதான் புது மாடலாக இருக்கலாம். நாங்கள் எல்லாம் 25 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை. அதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்," என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.