திருமகன் ஈவெரா மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைவு:
கடந்த 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மறைவையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொகுதி காலியாக இருக்கும் தகவலை, தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார். அதையடுத்து, தேர்தல் தேதி குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா இன்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா பதவி வகித்து வந்தார்.
மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் திருமகன் ஈவெரா அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் ஜனவரி 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு, திருமகன் ஈவெரா எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றார்.
ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெராவின் இயற்பெயர் ராம் ஆகும். இவர் தந்தை ஈவிகேஸ் இளங்கோவன், பெரியார் ஈ.வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத்தின் பேரனும் ஆவார். திருமகன் ஈவெராவுக்கு சஞ்சய் என்ற மூத்த சகோதரர் உள்ளார்.
திருமகன் ஈவெரா தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஆவார். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராகவும் திருமகன் ஈவெரா இருந்துள்ளார்.
காலியானதாக அறிவிப்பு:
இந்நிலையில், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்ட பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்தான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அனுப்பி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.