ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.


பொதுக்குழுவை கூட்டி, இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவின் இருதரப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இருதரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவு


அதிமுக வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் எனவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், வேட்பாளர் தேர்வு அதிமுகவின் அவைத்தலைவர் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 


அதைத், தொடர்ந்து அதிமுகவின் தற்போதைய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வேட்பாளர் தேர்வு படிவத்தினை வெளியிட்டு வாக்களிக்க கோரியிருந்தார். அதில் நேற்று அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 7 மணிக்குள் தலைமை அலுவலகத்திற்கு வேட்பாளர் தேர்வு படிவம் வந்தடையும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. 


பலரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளரான தென்னரசை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


தேர்தல் ஆணையத்திடம் சம்ர்பிப்பு:


இந்நிலையில், நேற்று பெறப்பட்ட விண்ணப்பங்களை, இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.


ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்த ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம், “ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவது, சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பான செயல்.   


உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்றம் சார்பில் பொதுக்குழுவை கூட்டி, முடிவு எடுக்க நியமிக்கப்பட்ட  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், இது சம்பந்தமாக அனைவருக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. எந்த உணர்வுடன் உச்சநீதிமன்றம்  உத்தரவு வழங்கியதோ, அந்த உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார் யார்  வேட்பாளராக போட்டி போடுகிறார்கள் என்று தெரிவிக்க வேண்டியது அவைத் தலைவரின் கடமை. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.  இதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.” 


”இதர வேட்பாளர்கள் போட்டியிடுவதை அவைத் தலைவர் தட்டிப் பறிக்க முடியாது. முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுக்குழுவில் அதிக வாக்குகளை பெறுபவர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். ஆனால் அவைத் தலைவர் உசேனின் செயல் உச்சநீதிமன்றமே ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.