கூட்டணியை பலப்படுத்தும் அதிமுக

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கிடும் வகையில் பாஜக, பாமகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக அடுத்தாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவையும் இணைத்துள்ளது. இன்று காலை அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். 

Continues below advertisement

அதிமுக- பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன்

அப்போது அதிகாரப்பூர்வமாக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதை உறுதி செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், விட்டுக் கொடுத்துப் போபவர்கள் என்றைக்கும் கெட்டுப் போனதில்லை என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் பங்காளி சண்டை தான் " என தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.  தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன் என தெரிவித்தவர், அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தாங்களும் இடம்பெறுவோம் என கூறினார்.

டிடிவியை வரவேற்ற இபிஎஸ்

இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்

இதற்கு பதில் அளிக்கும் வபையில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும்  ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம் என அந்த பதிவில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.