தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையிலும், தமிழ்நாட்டில் அரசியல் களம் இன்னும் பரபரப்பாகவே காணப்படுகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆளுநரை இரண்டு முறை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரியும், அவர் இன்னும் அழைப்பு விடுக்காமல், பெரும்பான்மையை காட்டுமாறு கோரி வருகிறார். இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் நிலையில், இன்று மாலை ஆளுநரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மாலையில் என்ன திருப்பங்கள் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெகவிற்கு ஆட்டம் காட்டும் ஆளுநர்
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.
இந்நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெகவிற்கு 12 இடங்கள் தேவைப்பட்டன. ஆட்சி அமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்து நேற்று கடிதம் வழங்கினார் விஜய். இதனிடையே, தனிப்பெரும்பான்மையை பெற, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளிடம் ஆதரவு கோரினார் விஜய். அதில், 5 இடங்களை வைத்திருந்த காங்கிரஸ் ஆதரவு தருவதாகக் கூறி, திமுகவை கழற்றி விட்டது.
மற்ற கட்சிகள் இன்னும் தங்கள் முடிவுகளை தெரிவிக்காத நிலையில், விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து, இன்றும் ஆளுநரை சந்தித்த விஜய்யிடம், தனிப்பெரும்பான்மை இல்லாமல் எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என்று கேட்டுள்ளார் ஆளுநர். காங்கிரஸை சேர்த்து 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவை மட்டுமே விஜய் வழங்கியுள்ள நிலையில், ஆளுநர் பல்வேறு விளக்கங்களை கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இன்றும் இதுவரை விஜய்க்கு எந்த அழைப்பும் விடுக்காத ஆளுநர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால், தற்போது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
இதனிடையே, அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற சுமார் 30 அதிமுக எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் தலைமையில் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதோடு, புதுச்சேரியில் சொகுசு விடுதியில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், அந்த 30 எம்எல்ஏ-க்களும் விஜய்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் முடிவிலிருந்து முரண்பட்டு நிற்பதாக தகவல் வெளியானது.
இப்படிப்பட்ட சூழலில், திடீரென்று இன்று மாலை ஆளுநரை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு கூடியுள்ளது. அவர் எதற்காக ஆளுநரை சந்திக்கிறார் என்ற விவரம் வெளியாகாத நிலையில், ஒருவேளை நேற்று தீவாய் ஒரு தகவல் பரவியதுபோல், திமுக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோருவாரா என்ற கோணத்திலும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
மறுபுறம், தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடங்கி இருக்கும் அரசு திட்டங்களை செயல்படுத்தும் வகையில், விரைந்து ஒரு முடிவை எடுக்க ஆளுநரை வலியுறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று மாலை தமிழக அரசியல் எத்தகைய அதிரடி திருப்பம் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
