முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்து 4 ஆண்டுகள் நாளையோடு முடிவடையவுள்ள நிலையில், அவரது ஆட்சியை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கு – EPS சரமாரி தாக்கு
முதல்வர் தலைமையிலான 4ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டுவிட்டது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கு சவக்குழிக்குள் போய்விட்டதாக ஒருபடி மேலே சென்று கடுமையாக திமுக அரசை சாடியிருக்கிறார்.
கடந்த 24 மணி நேர செய்திகளை பட்டியலிட்ட எடப்பாடி
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அவைகளை பட்டியலுமிட்டுள்ளார். அதன்படி,
- -தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை
- திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு. -வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை.
- கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.
- புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு
ஆகியவற்றை அவர் குறிப்பிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சராசரி ஒரு நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொலை, கலவரங்களுக்கு இடையே வாழ்கிறோம் – ஈபிஎஸ்
மேலும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற கொலைகள், கலவரங்கள், சமூக அவலங்களுக்கு இடையேதான் தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு திரு. ஸ்டாலின் வருவார் பாருங்களேன் என்றும் நய்யாண்டி செய்துள்ள EPS, "The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றும் கடுமையாக சாடியிருக்கிறார்