படு தோல்வியை சந்தித்த அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்கு ஏற்ப தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக அதிமுக சார்பாக போராட்டமும், முன்பாக தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்ற பிரச்சாரத்தையும் தொடங்கினார். ஆனால் தேர்தல் முடிவில் 3வது இடத்திற்கே அதிமுக தள்ளப்பட்டுள்ளது. அதிலும் அதிமுகவிற்கு கை கொடுத்தது வட மாவட்டங்கள் மட்டும் தான். தென் மாவட்டத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் திண்டுக்கல், தேனி, விருதுநகர், உட்பட பல மாவட்டங்களில் பல தொகுதிகளில் தோல்வியை  தழுவியது.

Continues below advertisement

காலியான தென் மாவட்ட அதிமுக

அதிமுகவின் முகங்களாக அறியப்பட்ட செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி சண்முகநாதன், கடம்பூர் ராஜு  கீர்த்திகா முனியசாமி  உள்பட இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் படுதோல்வி அடைந்தனர். அதே நேரம் அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையாவும், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் மட்டுமே வெற்றி பெற்றார்கள். இதே போன்று ஒரிரு தொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்கள். மத்திய மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இதே நிலைதான். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது தென் மாவட்டத்தில் அதிமுகவில் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவை கட்சியில் இருந்து புறக்கணித்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. 

இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி

அதே நேரம் ஓபிஎஸ் அணியினர் எந்தவித பொறுப்பும் வேண்டாம் அதிமுகவில் இணைத்துக்கொள்ளுங்கள் என எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சியில் கூட சேர்க்கவில்லை. ஆனால் திமுகவில் சேர்ந்த ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் தான் தோல்விக்கு காரணம் என அரசியல் விமர்சர்கள் கூறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு எதிராக வேலுமணி தரப்பில் ஒரு தரப்பினர் போர் கொடி தூக்கியுள்ளனர். தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என காய் நகர்த்தினார்கள். ஆனால் அங்கும் எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டார். இதனால் வேறு வழியில்லாமல் எஸ்.பி.வேலுமணி அணியினர் கட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

Continues below advertisement

தென் மாவட்டங்களில் அதிமுக கூடாரம் காலி

அவர்களது கோரிக்கையை ஏற்காமல் பலரது மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிச்சாமியால்  பறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி ஆளுங்கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.  அதிமுகவில் 4 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் ராஜினாமா செய்து விட்டு இணைந்தனர். அதேபோன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதனால்  தென் மாவட்டங்களில் அதிமுக கூடாரம் காலி ஆகி வருகிறது.

 அடுத்தது என்ன.?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் கட்சியின் நிலைமை மோசமாகி வருகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரம் எனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக இருக்கும் என ஜெயலலிதாவின் கூறிய வார்த்தைகள்  பார்த்து அதிமுக உண்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.