சேலத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, ’’நான் கனவுலகில் வாழவில்லை. முதல்வர் ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார். பொய்யைப் பொருந்துவதுபோல சொன்னால், உண்மை திருதிருவென விழிக்குமாம். அதுபோல முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். 


பதவிக்கு வருவதற்காகவே திமுக கூட்டணி அமைக்கிறது


கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் முதல்வர் ஆனார். இப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியுள்ளார். குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிக்கு வருவதற்காகவே திமுக கூட்டணி அமைக்கிறது. அக்கட்சியில் குடும்பத்தினர் மட்டுமே உயர் பொறுப்புக்கு வரமுடியும்’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் முன்னாள் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, ''திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று சிலர் காத்திருப்பார்கள். அதுபோல இருக்கிறார். அவர் கனவுலகில் வாழ்கிறார். 2026 மட்டுமல்ல, அதற்குப் பின் வரும் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே ஆட்சிக்கு வரும் என்று கூறியிருந்தார். 


இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.