தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதன் படி அதிமுக தற்போது பாஜகவுடன் மட்டுமே தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக எந்த எந்த கட்சியை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. அந்த வகையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடும், முக்கியமாக நடிகர் விஜய்யின் தவெக கட்சியையும் கூட்டணியில் இணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 

Continues below advertisement


அதிமுக பொதுக்குழு கூட்டம்


இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் நிர்வாகிகளோடு ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற புதன் கிழமை டிசம்பர் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன்  தலைமையில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு


இந்த கூட்டத்தில் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த கூட்டத்தில் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்மானங்கள், கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.