வேளச்சேரி பகுதியில் மளிகைப்பொருட்களை டெலிவரி செய்ய வந்த ஊழியரை மர்ம நபர்கள் வழி மறித்து அரிவாளார் வெட்டிய காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கற்களை கொண்டு தாக்கி அந்த டெலிவரி ஊழியரை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை வேளச்சேரியில் நேற்று , மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி என்பது நெஞ்சை பதைக்க வைக்கிறது.
இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே.? தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது. இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர்?
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.