TN Politics: வார்த்தை மாறிய ஈபிஎஸ் - பாஜக கணக்கு, கலையும் கூட்டணி - யார் உள்ளே? யார் வெளியே? திமுக ஹாப்பி?
TN Politics: அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TN Politics: அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணியால், சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தற்போதே வேகமெடுத்துள்ளன.
பிரிந்த கூட்டணி:
மோடியா? லேடியா? என தமிழகம் முழுவதும் சவால் விட்டு பாஜகவை வீழ்த்தியவர் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுக வலிய சென்று பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. மத்திய விசாரணை அமைப்புகளிடம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளே இதற்கு காரணமாக கூறப்பட்டது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலை இந்த கூட்டணி சேர்ந்தே எதிர்கொண்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த கூட்டணியால் ஈட்ட முடியவில்லை. இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக தலைவர்கள் இடையேயான மோதல் முற்றியது. அதனை தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. 2024 மக்களவை தேர்தலையும் தனித்தே எதிர்கொண்டது.
வார்த்தை மாறிய ஈபிஎஸ்..!
பாஜக உடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்து வந்தார். அண்மையில் தனது கருத்தை மாற்றியவர், தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தொடர்ந்து திமுக மட்டுமே தனது ஒரே அரசியல் எதிரி என்றும் பேசினார். இந்நிலையில் தான், இனி வாய்ப்பே இல்லை என்ற வார்த்தைகளை மறந்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக உடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. இதனால், தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி கணக்குகள் முற்றிலுமாக மாற தொடங்கியுள்ளன.
எஸ்டிபிஐ அதிருப்தி:
இதுநாள் வரை அதிமுகவிற்கு ஆதரவாக இருந்த எஸ்டிபிஐ கட்சி, பாஜக உடனான ஈபிஎஸ் கூட்டணியால் அதிருப்தி அடைந்துள்ளது. அதன் விளைவாகவே எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று அண்ணா அறிவாலயம் சென்று, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். சந்திப்பு குறித்து பேசிய கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியதற்கும் நன்றி தெரிவிக்கவே முதலமைச்சரை சந்தித்ததாக”விளக்கமளித்தார். நிர்வாக ரீதியான சந்திப்பாக இருந்தால் தலைமைச் செயலகத்திலேயே முதலமைச்சரை சந்தித்து இருக்கலாம், ஆனால் பாஜக - அதிமுக உடனான கூட்டணி அறிவிப்புக்கு மத்தியில், நெல்லை முபாரக் அறிவாலயம் வந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
மாறும் கூட்டணி கணக்குகள்:
பாஜக மீது ஏற்கனவே சிறுபான்மையினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாகவே எஸ்டிபிஐ கட்சியினரும் திமுகவிடம் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலின்போது, அதிமுகவை தாண்டி சென்று பாஜகவிடம் பாமக கூட்டணி அமைத்தது. தற்போது மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இதனால், பாமகவின் நிலைப்பாடு என்ன? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த முறை அதிமுகவை தவிர, மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜக கீழான கூட்டணியில் இருந்தன. ஜி.கே. வாசன் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். இதனால் அதிமுகவினரிடையே ஒரு அதிருப்தி நிலவியது. ஆனால், அந்த மொத்த கட்சிகளையும் தற்போது அதிமுக ஒருங்கிணைத்து சென்று, 2026ல் வெற்றியை ஈட்டுமா? அது சாத்தியமா? என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.
திமுக ஹாப்பி?
பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்து இருப்பது, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை எளிதாக்கி இருப்பியதாக அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தமிழர்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதகாவும், சிறுபான்மையினரின் உரிமைகளை பாஜக பறிப்பதாகவும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளின் பலனை பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள, அதிமுகவும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அரசியல் வட்டாரத்தினர் கணிக்கின்றனர். மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு பயந்து, அதிமுக வளைந்துகொடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, தற்போது வலுவாக உள்ள தங்களது கூட்டணியை அப்படியே தொடர்ந்து, 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை அறுவடை செய்ய திமுக முனைகிறது.
தமிழ்நாட்டில் 4 முனை போட்டி?
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாதக மற்றும் தவெக என ஐந்து முனை போட்டி நிலவும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைந்ததால், தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக தங்களது வாக்கு வங்கியுடன் திமுகவிற்கு எதிரான வாக்குகளையும் பெறும்போது தான், அதிமுகவால் வெற்றி பெற முடியும். ஆனால், பாஜக உடனான அவர்களின் கூட்டணியால் அது அதிமுகவிற்கு கிடைக்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாற்று சக்தியாக கருதி நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து சளித்து போனவர்கள் கூட, இந்த முறை விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம், வழக்கத்தை காட்டிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.





















