EPS On Stalin: முதல் கூட்டணி அறிக்கை “பாஜக” பெயர் கூட சொல்லாத எடப்பாடி - ஸ்டாலினை ரவுண்டு கட்டி விமர்சனம்
EPS On Stalin: அதிமுக கூட்டணி தொடர்பான முதல் அறிக்கையில் பாஜகவின் பெயரை கூட, எடப்பாடி பழனிசாமி குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

EPS On Stalin: அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின் மீது, எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார். நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான திரு. @mkstalin, தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 12, 2025
நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது.… pic.twitter.com/a9l5gHMKZK
அடுக்கடுக்கான கேள்விகள்
தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். "என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? "NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
”அதிமுகவிற்கே வெற்றி”
ஸ்டாலின் நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்! தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!
(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!)” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக பெயர் தவிர்ப்பு:
பாஜக உடனான கூட்டணி உறுதியான பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதல் கண்டன அறிக்கை இதுவாகும். அதில் ஆங்காங்கே அதிமுக கூட்டணி என குறிப்பிட்டுள்ளார். ஆனால், எங்கேயுமே ஒருமுறை கூட பாஜகவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. ஏற்கனவே, மத்திய விசாரணை அமைப்புகளின் முன் உள்ள வழக்குகளை வைத்து நிர்பந்தப்படுத்தியே அதிமுகவை தனது கூட்டணியில் பாஜக இணைத்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் தான் பாஜகவின் பெயரை எடப்பாடி பழனிசாமி தவிர்த்துள்ளார். அதோடு, பாஜக உடனான கூட்டணியால், அதிமுகவின் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனை தவிர்க்கவும் தான், பாஜக உடனான கூட்டணி குறித்து பொதுவெளியில் எடப்பாடி பெரிதாக குறிப்பிடவில்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.





















