சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் நிதியிலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு நிதியாண்டில் 25 பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டு பணிகள் முடிவு பெற்றுள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் நிதியிலிருந்து 2 கோடியே 45 லட்சத்துக்கு 85 ஆயிரம் மதிப்பீட்டிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஆண்டில் 58 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளின் திறப்புவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள தாதாபுரம், வேப்பனேரி, நெடுங்குளம், சித்தூர், பக்கநாடு, சிலுவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் துவக்கப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ஆழ்துளை கிணறு அமைத்தல், பைப் லைன் அமைத்தல், காங்கிரட் சாலை அமைத்தல், நியாயவிலை கடை கட்டிடம், நீர் தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார். மேலும் எடப்பாடி நகராட்சி, ஜலகண்டாபுரம், வனவாசி,நங்கவள்ளி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மினி டேங்க் அமைத்தல், காங்கிரட் சாலை அமைத்தல், பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியது, “எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மேம்பாட்டு நிதியிலிருந்து 25 பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டு பணிகள் முடிவு பெற்றுள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் நிதியிலிருந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில் முடிவுற்ற பணிகளை திறக்கப்பட்டுள்ளது. சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 59 லட்சம் வழங்கி மாநிலங்களவை சந்திரசேகருக்கு மனமார்ந்த நன்றியை தொகுதி மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பதினொன்றை ஆண்டு காலம் மக்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பான்மையானவை நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கையான காவிரி தண்ணீரை கேட்டார்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். வறண்ட 100 ஏரிகள் நீரேற்று திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக ஆறு ஏரிகள் நிரப்பப்பட்டது. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் மெத்தனமாக, ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நூறு ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றிருக்கும். இனியாவது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இத்திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர், எடப்பாடி நகராட்சி அதிமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், எடப்பாடி ஆய்வு மாளிகையில் எடப்பாடி நகராட்சியில் திமுக உட்பட பல கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி துண்டினை அணிவித்து அதிமுகவில் அவர்களை வரவேற்றார்.