அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி பிரச்சார வேனில் வருகை தந்தார்.


பொதுக்குழுக் கூட்டம்:


அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷங்கள் எழுந்த நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டு தற்காலிகப் பொதுச்செயலாளர் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே அப்பதவியை கைப்பற்ற போட்டிபோட்டதால், அப்பொதுக்குழுக்கூட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாகவும், ஜூன் 11ல் நடைபெறும் கூட்டத்தில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.




ஓபிஎஸ் மனுத்தாக்கல்:


ஆனால், இக்கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓபன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கானது கடந்த ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக நீடிக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது.


ஆனால் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு 2,665 உறுப்பினர்களில் 2,190 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் 2,432 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து முடிவெடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.




ஈபிஎஸ் வருகை:


இருத்தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி இவ்வழக்கின் தீர்ப்பை இன்று காலை 9 மணிக்கு அறிவிப்பதாக கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்குமா நடக்காதா என்றே தெரியாத நிலையில் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி இன்று தற்காலிகப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சார வேனில் வருகை தந்தார்.




வாகனத்தில் மாற்றம்:


ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் பிரச்சார வேனிலும், எடப்பாடி பழனிசாமி காரிலும் வருகை தந்த நிலையில், இன்றைய பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, அதிமுக நிர்வாகிகள் கார்கள் முன்னும் பின்னும் அணி வகுக்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பிரச்சார வேனில் வருகை தந்தார்.  இந்த வாகன மாற்றத்திற்கு திடீர் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய பொதுக்குழுக்கூட்டத்தில் ஓபிஎஸ் வசம் தற்போது இருக்கும் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டு, அப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


எனினும், இக்கூட்டம் நடக்குமா நடக்காதா? என்பது நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.