தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டில் தான் வரப்போகிறது. ஆனால், அரசியல் களம் அதற்கு முன்னரே சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றத் தேர்தல்களை காட்டிலும் வரும் தேர்தலில் ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்ற நிலையில், போட்டிப் போட்டிக்கொண்டு இப்போதே அரசியல் கட்சிகள் பல்வேறு வகையிலான வடிவில் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.  

இந்நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்ற தலைவர்களுக்கு முன்னர் தன்னுடைய பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார். 234 தொகுதிகளிலும் ’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’ என்ற தலைப்பில் மக்களை சந்திக்கவிருக்கும் அவர், திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது பேச திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதா பாணியை கடைபிடிக்கும் எடப்பாடி பழனிசாமி

பிரச்சாரம், வேட்பாளர்கள் அறிவிப்பு, சுற்றுப்பயணம் என தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே முடிவுகளை எடுத்து முன்னரே அறிவிப்பவர் ஜெயலலிதா, அவர் பாணியில் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய சுற்றுப் பயணத்தை மற்ற தலைவர்களுக்கு முன்னர் அறிவித்து, பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஆளுங்கட்சி உள்ளிட்டோர் அதிர்ச்சி

’உடன்பிறப்பே வா’, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று புதுபுது வடிவில் திமுக தன்னுடைய கட்சி பணிகளை பலப்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீரென தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று ஆளுங்கட்சியினரே எதிர்பார்க்கவில்லை. மாவட்ட செயலாளர் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என்று எடப்பாடி சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நேரடியாக மக்களை சந்திக்கும் திட்டத்தை கையெலெடுத்து 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளது பிற கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக நிர்வாகிகளுக்கும் அழைப்பு

கொள்கை ரீதியாகவும் களத்திலும் பாஜகவினருக்கும் அதிமுகவினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதை களையும் நோக்கோடும், பாஜக, அதிமுக என்ற இரு கட்சிகளின் தொண்டர்களையும் ஒன்றிணைக்கும் எண்ணத்தோடும் தன்னுடைய சுற்றுப்பயணத்தில் பங்கேற்க பாஜகவினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது கூட்டணி கட்சியான பாஜகவிற்கு பெரும் தெம்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியே பிடித்தே ஆக வேண்டிய கட்டாயம்

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை இது அவருக்கு வாழ்வா, சாவா? தேர்தல் இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சியை அமைத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர், இல்லையெனில் தேர்தலுக்கு பிறகு தன்னுடைய தலைமையே கேள்விக்குறியாவிடும் நிலை வந்துவிடும் என்பதற்காக, முன் கூட்டியே தன்னுடைய பிரச்சாரத்தையும், நிர்வாகிகள் சந்திப்பையும் நிகழ்த்தத் தொடங்கியிருக்கிறார் அவர். நேரடியாக மக்களை சந்தித்து பேசுவது மட்டுமே அதிமுகவிற்கு எதிர்காலத்தை கொடுக்கும் என்பதை அறிந்துள்ள அவர், அதற்காகவே தேர்தலுக்கும் இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் முதல் ஆளாக 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். 

2026ல் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த சுற்றுப்பயணத்தை அவர் அறிவித்ததாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.