தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொலைச் சம்பவங்கள் தொட்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை அருகே போதை ஊசி போட்டுக் கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளைஞர் கொலை:
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன். ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.
வசனம் மட்டும் பேசினால் போதாது:
போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே. போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை:
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும். இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நேற்று மட்டும் திருநெல்வேலியில் ஒரு கொலை, சென்னையில் ஒரு கொலை, மதுரையில் ஒரு என்கவுன்டர் சம்பவங்கள் அரங்கேறியது.
திமுக ஆட்சியில் பகுஜன்சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் என தமிழ்நாட்டையே உலுக்கிய பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்ற சம்பவங்கள் ஆளுங்கட்சி திமுக-விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.