திமுகவின் 15வது பொதுக்குழு நேற்று நடந்து முடிந்து, 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தலைவராக போட்டியின்றி பொறுப்பேற்றியிருக்கிறார். பொதுக்குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மு.க.ஸ்டாலினை பாரட்டியும் புகழ்ந்தும் பேசியிருந்தனர்.
வழக்கம்போல, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நகைச்சுவை உணர்வு மிகுந்தவருமான துரைமுருகன் பேசி முடிந்த பின்னர், அருகே இருந்த நபரை ‘டேய் எங்கடா அது, எடுடா’ என்றார். அரங்கம் ஒரு நிமிடம் அதிர்ந்து அமைதியானது. என்ன பேசுகிறார் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஒரு பெட்டியில் இருந்து புத்தம் புது இரண்டு பேனாக்களை எடுத்தார் துரைமுருகன்.
மு.க.ஸ்டாலின் போடும் திட்டங்கள் எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் ஒரு ஜோடி Mont Blanc பேனாக்களை அவருக்கு நான் அன்பளிப்பாக அளிக்கிறேன் என்றார். அதோடு, இந்த பேனாவால் தான் இனி மு.க.ஸ்டாலின் கையெழுத்திடவேண்டும், வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புகளை நான் கொடுக்கும் இந்த பேனாவை கொண்டே எழுதி வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Mont Blanc பேனாவில் Rare Collection பேனாக்களை முதல்வருக்கு அளிக்கிறேன் என்று சொல்லி, பேசிக்கொண்டிருந்த போடியத்திலிருந்து நேராக திமுக தலைவரை நோக்கி சென்றார் துரைமுருகன், அவர் தன்னை நோக்கி வந்ததும் எழுந்த மு.க.ஸ்டாலினின் பையில் இருந்த பேனாவை எடுத்து கீழே போட்டுவிட்டு, தான் அன்பளிப்பாக கொடுக்கும் இரண்டு பேனாக்களையும் அவரது சட்டப்பையில் சொருகினார் துரைமுருகன்.
துரைமுருகனின் இந்த செயல் திமுக பொதுக்குழுவில் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கிய பேனா இணையதளம் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலை 40 ஆயிரத்தில் தொடங்கி, 2 லட்சம் ரூபாய் வரையில் பல்வேறு சேர்மானங்களோடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மன் கண்டுபிடிப்பான இந்த பேனாக்கள் வைத்திருப்பதை பலரும் பெரிய அங்கீகாரமாக உலக நாடுகளில் நினைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.