மதசார்பின்மை, சமூக சமத்துவம் உள்ளிட்ட கொள்கைகளுடன் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கி வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.


இந்த புகார்களை சொல்வதும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதும் தந்தை பெரியாரை கொள்கை தலைவராக ஏற்று செயல்பட்டு வரும் D Stock-ஐ சேர்ந்தவர்கள்தான்.


பழனி முருகன் மாநாட்டில் தொடங்கிய சர்ச்சை


பழனியில் அகில உலக முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு நடத்தினார். அதில், சனாதானத்தை தூக்கிப் பிடிக்கும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரையும் பங்கேற்க வைத்தது அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னர், அம்மன் மாநாடு விரைவில் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு திராவிட கொள்கைகளை பின்பற்றி வரும் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.  இந்து சமய அறநிலையத்துறையின் பணி இதுவல்ல என்று பலரும் சமூக வலைதளம் மூலம் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.


தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியாரிய இயக்கங்கள்


முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பின. குறிப்பாக, 5வது தீர்மானமான, ’முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வங்கப்படும் என்பதும், 9வது தீர்மானமான, விழா காலங்களிலும் சஷ்டி நாட்களிலும் பள்ளி மாணவர்களை கொண்டு கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்பதும் 12வது தீர்மானமான முருகன், பக்தி இலக்கியங்களில் பெருமைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்துவது என்பதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.






எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் விடுதலை கழகம்


இந்த 3 தீர்மானங்களை நிராகரிக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பெரியாரிய, சமூக, சமத்துவ அமைப்புகள் அரசை வலியுறுத்தின.  ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத அமைச்சர் சேகர்பாபு அதனை நிறைவேற்றிக் காட்டினார். இதனால் அப்போதிலிருந்தே சேகர்பாபு மீது பெரியாரிய இயக்கங்கள் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கின.


தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய சேகர்பாபு


இந்த மூன்று தீர்மானங்களை தற்போது அமைச்சர் சேகர்பாபு, காஞ்சிபுரம் ஏகாம்பரதநாதர் பள்ளி, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் செயல்படுத்த தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு மாணவர் இயக்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.






சமூக வலைதளங்களில் சேகர்பாபுவை வறுத்தெடுக்கும் பெரியாரிய அமைப்புகள்


இந்நிலையில், இந்த நிலைப்பாட்டை கைவிடக்கோரியும் திராவிட மாடல் அரசின் அமைச்சராக இருந்துக்கொண்டு சேகர்பாபு சனாதனத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறியும் சமூக வலைதளங்களில் பெரியாரிய அமைப்புகள், மே 17 இயக்கம் உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.






கைக்கோர்த்த வி.சி.க, மார்க்சிஸ்ட்


இவர்கள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் இந்து சமய அறநிலையத்துறையின் இந்த செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரின் நல்ல நோக்கத்திற்கு மாறாக பள்ளி மாணவிகளை பாராயணம் சொல்ல சொல்லி பழமை பெண் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு செயல்படுத்துகிறார் என்று அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து ரவிக்குமார் பதிவிட்டுளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பியான சு.வெங்கடேசனும் ’ இந்து அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளை பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்பும் அறநிலையத்துறை நிர்வாகமே, அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.